ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினரை தேர்வு செய்ய 4 ஆண்டுகளில் 3வது முறையாக ஓட்டு போட்ட வாக்காளர்கள்

ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினரை தேர்வு செய்ய வாக்காளர்கள் 4 ஆண்டுகளில் 3வது முறையாக இன்று (பிப்ரவரி 5) ஓட்டு போட்டனர்.;

Update: 2025-02-05 12:15 GMT

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி, செங்குந்தர்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்த பெண்களை படத்தில் காணலாம்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினரை தேர்வு செய்ய வாக்காளர்கள் 4 ஆண்டுகளில் 3வது முறையாக இன்று (பிப்ரவரி 5) ஓட்டு போட்டனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்திய கூட்டணி சார்பில் திருமகன் ஈவெரா காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யுவராஜா போட்டியிட்டார்.

இந்த தேர்தலில் திருமகன் ஈவெரா 62,495 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து, திருமகன் ஈவெரா உடல் நலக்குறைவால் இறந்ததால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு போட்டியிட்டார். இந்த இடைத்தேர்தலில் இளங்கோவன் 66 ஆயிரத்து 233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இளங்கோவன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் தேதி காலமானார். இதைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மீண்டும் 2-வது முறையாக இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து 2வது முறையாக இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (பிப்ரவரி 5) நடந்தது. இதில், ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் வாக்களித்தனர். இதன்படி கடந்த 4 ஆண்டுகளில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 3வது முறையாக சட்டமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்காக மக்கள் வாக்களித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News