கோபி அருகே வீடுகளில் கருப்பு கொடி கட்டி கிராம மக்கள் போராட்டம்
ஈரோடு மாவட்டம் கோபி அருகே 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி கட்டி கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.;
கோபி அருகே 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி கட்டி கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த டி.என்.பாளையம் அருகேயுள்ள கொங்கர்பாளையம் ஊராட்சி வினோபா நகர் பகுதியில் உள்ள குண்டேரிப்பள்ளம் அணை அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கிராம மக்கள் கடுமையான எதிர்ப்பை மீறியும் நீதிமன்ற ஆணைபடி தனியார் சிலர் பைப் லைன் அமைத்து உள்ளனர்.
இந்த பைப் லைன் அமைக்கப்பட்டு இருப்பதில் விதிமீறல்கள் இருப்பதாக, தனியாருக்கு பைப் லைன் அமைக்க கொடுத்து பாதை வரி அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்த கிராம மக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோபி தாசில்தார் அலுவலகத்தில் 4 நாட்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தாசில்தார் சரவணன் கிராம மக்களிடம் கூறுகையில்; குழு அமைத்து, பைப் லைன் போடப்பட்ட இடங்களில் முழுமையாக மக்கள் முன்னிலையில் ஆய்வு செய்யப்படும் என்று உறுதி அளித்ததை தொடந்து, கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தை கைலிட்டு வீடுகளுக்கு சென்றனர்.
அதனை தொடர்ந்து, கொங்கர்பாளையம் ஊராட்சி சுற்றியுள்ள கிராம பகுதிகளான வினோபா நகரை மையமாக வைத்து, வினோபா நகர், எஸ்.டி.காலனி, கோவிலூர், தோப்பூர், கொங்கர்பாளையம், புது வலவு, குன்னாங்கரடு உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் தங்களின் வீடுகளில் நேற்று இரவு முதல் கருப்பு கொடி ஏற்றி வீடுகளில் அமைதி வழியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
100-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி இருப்பது குறித்து கிராம மக்களிடம் கேட்டபோது:
வருகின்ற உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தலை இந்த கிராம மக்கள் புறக்கணிக்க போவதாகவும் விதி மீறல்களுடன் பைப் லைன் அமைக்க துணை போன சில அரசு அதிகாரிகளை கண்டிக்கும் விதமாகவும், ஏற்கனவே ஊராட்சியில் அனுமதி இல்லாமல் தனியாருக்கு சொந்தமான இடத்தில் போடப்பட்ட போர்க்குழிக்கு (ஆழ்துளை கிணறு) எதிராக கொங்கர்பாளையம் ஊராட்சி சார்பில் ஊராட்சி தலைவர் மற்றும் 12 உறுப்பினர்கள் ஒரு மனதாக போடப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றாத சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளை கண்டிக்கும் விதமாகவும் அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அக்கிராம மக்கள் தெரிவித்தனர்.
மேலும், இன்று அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பெரும்பாலும் வேலைக்குச் செல்லாமல் தங்களின் வீடுகளிலேயே கருப்பு கொடி கட்டி போராடி வருவதாக தெரிவித்தனர், இதனால் கொங்கர்பாளையம் ஊராட்சி கிராம பகுதிகளில் பரபரப்பான சூழலே காணப்படுகிறது.