கோபி அருகே கிராம மக்களின் எதிர்ப்பை மீறி தனியார் நிலத்துக்கு குழாய் அமைக்கும் பணி: மறியலில் ஈடுபட்டவர்கள் கைது

ஈரோடு மாவட்டம் கோபி அருகே குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் கிராம மக்களின் எதிர்ப்பை மீறி குழாய் அமைக்கும் பணியை எதிர்த்து மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2025-01-31 02:45 GMT

குழாய் பதிக்கும் பணிக்காக குவிக்கப்பட்ட அதிரடி படை மற்றும் போலீசார்.

கோபி அருகே குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் கிராம மக்களின் எதிர்ப்பை மீறி குழாய் அமைக்கும் பணியை எதிர்த்து மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த டி.என்.பாளையம் அருகே குண்டேரிப்பள்ளம் அணை அமைந்துள்ளது. இந்த அணை குன்றி மலையடிவாரத்தில் இருக்கிறது. இந்தநிலையில், அதே பகுதியை சேர்ந்த 6 பேர் அணை அருகே உள்ள விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து, அங்கிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள தங்களுக்கு சொந்தமான 50 ஏக்கர் விவசாய நிலத்துக்கு பிளாஸ்டிக் குழாய்கள் அமைத்து தண்ணீர் கொண்டு செல்ல முயன்றனர்.

இவ்வாறு தண்ணீர் கொண்டு சென்றால் குண்டேரிப்பள்ளம் அணையின் நிலத்தடி நீர்மட்டம் குறையும். மேலும் அணையில் தண்ணீர் குடித்து தாகம் தணித்துக்கொண்ட காட்டு வனவிலங்கு கள் தண்ணீரை தேடி ஊருக்குள் வந்து விடும் என்று கூறி அந்த பகுதியை சேர்ந்த 10 கிராம மக்களும் கடந்த 6 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.


இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல கோர்ட்டில் உத்தரவு பெற்று குழாய் அமைக்க நடவடிக்கை எடுத்தனர். ஆனால் கிராம மக்களின் தொடர் போராட்டம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் கோர்ட்டு உத்தரவு பெற்று போலீஸ் பாதுகாப்புடன் குழாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் நேற்று முன்தினம் மாலை கோபி தாசில்தார் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விடிய, விடிய குளிரை பொருட்படுத்தாமல் அங்கேயே படுத்து தூங்கினர். இதைத்தொடர்ந்து நேற்று 2வது நாளாக மீண்டும் தர்ணா போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் திருப்பூர் சுப்பராயன் எம்.பி. அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர் கூறும்போது, 'இது குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். எனினும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி கோபி தாலுகா அலுவலகத் தில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே நேற்று காலை கொங்கர்பாளையம் ஊராட்சியை சேர்ந்த வினோபாநகர், கோவிலூர், தோப்பூர், வாணிப்புத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி கிராம மக்கள் வெளியேறாமல் தடுத்தனர். கிராமத்துக்குள் செல்பவர்கள் குறித்த முழு விவரங்களையும் பெற்ற பின்பே அவர் களை போலீசார் அனுமதித்தனர். இதற்காக கொங்கர்பாளையம் பகுதியில் சத்தியமங்கலம் போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.


அதைத்தொடர்ந்து 7 பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு கிராம மக்களின் கடுமையான எதிர்ப்பை மீறி குண்டேரிப்பள்ளம் பகுதியில் இருந்து எஸ்.டி.காலனி என சுமார் 6 கி.மீ. வரை குழாய் அமைக்கும் பணி தொடங்கியது. அப்போது குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வாணிப்புத்தூரில் உள்ள அத்தாணி-சத்தி ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட பெண்கள் ஒன்று திரண்டனர். உடனே போலீ சார் அங்கு சென்று 18 பெண்களை கைது செய்தனர்.

குழாய் அமைக்கப்படும் பகுதியில் ஒரு சிலர் தங்கள் பட்டா நிலம் வழியாக குழாய் பதிக்கக்கூடாது என்று தாசில்தார் சரவணன் உள்பட வருவாய்த்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வருவாய்த்துறை, போலீசார் மற்றும் எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதையும் மீறி இரவு வரை குழாய் அமைக்கும் பணி நடந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News