பாபர் மசூதி இடிப்பு தினம்: ஈரோட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிப்பு தினத்தைக் கண்டித்து, ஈரோடு கருங்கல்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2023-12-06 10:03 GMT

ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர்.

பாபர் மசூதி இடிப்பு தினத்தைக் கண்டித்து, ஈரோடு கருங்கல்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் புதன்கிழமை (இன்று) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

முகலாயர் ஆட்சி காலத்தில் நிறுப்பட்ட பாபர் மசூதி கடந்த 1992ம் ஆண்டு நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது இடிக்கப்பட்டது. பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி தலைமையில் மசூதி இடிக்கப்பட்டதாக போலீசார் வழக்கு தொடர்ந்தனர். நீண்ட வருடங்களுக்கு பின்னர் இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதன் பின்னர் பாபர் மசூதி மற்றும் அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கும் இடம் ஒதுக்கீடு செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6ம் தேதி ஆண்டுதோறும் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளின் சார்பில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை பாசிச எதிர்ப்பு தினமாக எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கடைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் முஹம்மது லுக்மானுல் ஹக்கீம் தலைமை வகித்து, பாபர் மசூதி தகர்க்கப்பட்டதை கண்டித்தும், அயோத்தியில் பாபர் மசூதி இடித்துத் தள்ளப்பட்ட 1992 டிச.6 அன்று கறுப்பு தினத்தை நினைவுகூர்ந்து பேசினார். தொடர்ந்து, பாபர் மசூதியின் இடம் எங்கள் இடம் எனவும், தற்போது அயோத்தியில் ராமர் கோவிலை கட்டி வரும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலச் செயலாளர் அபூபக்கர் சித்திக், காங்கிரஸ் கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன், திக, திமுக, விடுதலை சிறுத்தை கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழ் புலிகள் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News