பவானி அருகே அனுமதி பெறாமல் முயல் ரத்தத்தில் ஹேர் ஆயில் தயாரிப்பு: 300 பாட்டில்கள் பறிமுதல்
அம்மாபேட்டை அருகே அனுமதி பெறாமல் இயங்கி வந்த முயல் ரத்தத்தில் ஹேர் ஆயில் தயாரிக்கும் நிறுவனத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 300 பாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;
அம்மாபேட்டை அருகே அனுமதி பெறாமல் இயங்கி வந்த முயல் ரத்தத்தில் ஹேர் ஆயில் தயாரிக்கும் நிறுவனத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 300 பாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டையை அருகே உள்ள சிங்கம்பேட்டை பகுதியில் கருடா 'ஹேர் ஆயில்' என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் முயல் ரத்தம், மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட எண்ணெயைப் பயன்படுத்தினால், வழுக்கைத் தலையிலும் ஏழே நாளில் முடி முளைக்கும் என சமூக ஊடகங்களில் அதிக அளவில் விளம்பரம் செய்யப்பட்டு வந்தது.
இதையடுத்து தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் கூட்டம், கூட்டமாக இங்கு வந்து ஹேர் ஆயிலை வாங்கி சென்றனர். இந்தநிலையில், இந்நிறுவனம் முறையான அனுமதி பெற்றுள்ளதா? என அப்பகுதி மக்கள் சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து சென்னை மருந்துகள் மற்றும் அழகு சாதன மருத்துவ துறை இயக்குநருக்கு புகார் சென்றது.
அதன் அடிப்படையில், ஈரோடு மாவட்ட உதவி இயக்குநர் ராம் பிரபு அறிவுரைப்படி, மருந்து ஆய்வாளர்கள் வெங்கடேஷ், அமுதா ஆகியோர் சிங்கம்பேட்டைக்கு நேற்று வந்து ஹேர் ஆயில் தயாரிக்கும் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உரிய அனுமதியின்றி மருந்துகள் தயாரிப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 300 'ஹேர் ஆயில்' பாட்டில்களையும், அதனை தயாரிப்பதற்கு தேவையான மூலப் பொருட்கள் மற்றும் உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர்.
ஹேர் ஆயில்' தரமானதா? என்பதை அறிவதற்காக அதனை ஆய்வு செய்ய பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்படும். ஆய்வு முடிவுகள் வந்த பிறகு மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மருந்து ஆய்வாளர்கள் தெரிவித்தனர். மேலும் அந்த நிறுவனத்தினரிடம், முறையான அனுமதி பெறும் வரை ஆயில் விற்பனை செய்யக்கூடாது என்றும் எச்சரித்து சென்றனர்.