ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : பறக்கும் படையினர் சோதனையில் ரூ.54 லட்சம் பறிமுதல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி அமைக்கப்பட்ட பறக்கும் படையினர், நிலைக்கண்காணிப்பு குழுவினர் மூலம் இதுவரை ரூ. 54.13 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.;
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி அமைக்கப்பட்ட பறக்கும் படையினர், நிலைக்கண்காணிப்பு குழுவினர் மூலம் இதுவரை ரூ. 54.13 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (5ஆம் தேதி) நடைபெற உள்ளது.
பணம், பரிசு பொருட்கள் தடுப்பு
இதையொட்டி, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படை, நிலைக்கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சோதனை இடங்கள்
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட கருங்கல்பாளையம், கொல்லம்பாளையம், காளைமாட்டுச்சிலை, அரசு மருத்துவமனை, பி.பி. அக்ரஹாரம், வீரப்பன் சத்திரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு, ரூ. 50 ஆயிரத்திற்கும் மேல் ஆவணங்களின்றி எடுத்துவந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் தொகை விவரம்
கடந்த மாதம் 7ஆம் தேதி முதல் நேற்று வரை ஆவணங்களின்றி பணம் எடுத்துவந்ததாக 31 பேரிடம் இருந்து ரூ. 54 லட்சத்து 13 ஆயிரத்து 60 ரொக்கம் பறிமுதல் செய்தனர்.
இதில், 22 பேர் ஆவணங்கள் வழங்கியதன் பேரில், பறிமுதல் செய்த ரூ. 40 லட்சத்து 50 ஆயிரத்து 560 ரொக்கம் சம்பந்தப்பட்டவர்களிடம் விடுவிக்கப்பட்டது. மீதமுள்ள ரூ. 13 லட்சத்து 62 ஆயிரத்து 500 ரொக்கம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.