பண்ணாரி அம்மனுக்கு மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலில் இருந்து வஸ்திர மரியாதை
பண்ணாரி அம்மனுக்கு மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலில் இருந்து அர்ச்சகர்களால் வஸ்திர மரியாதை செய்யப்பட்டது.;
சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மனுக்கு மைசூர் சாமுண்டீஸ்வரி கோவில் அர்ச்சகர்களால் நேற்று (திங்கட்கிழமை) வஸ்திர மரியாதை செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்து பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு தமிழகம் மற்றும் கர்நாடக உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் தினசரி ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
இந்தநிலையில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சகம் இதர மாநிலங்களில் உள்ள கோவில்களுக்கும் தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கும் நல்லிணக்க உறவு மேம்பட தமிழக கோவில்களிலிருந்து இதர மாநில கோவில்களுக்கு வஸ்திர மரியாதை வழங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, கர்நாடக மாநிலம் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் ஜென்ம நட்சத்திரமான ரேவதி நட்சத்திரத் தினத்தன்று பண்ணாரி மாரியம்மன் கோவிலிருந்து மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பட்டுபுடவை, மஞ்சள், குங்குமம், வளையல்கள், பழ வகைகள், மாலைகள், பூஜை சாமான்கள் உள்ளிட்ட 11 தட்டுகளுடன் வஸ்திர மரியாதை செய்யப்பட்டது.
அதே போல் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து பௌர்ணமி தினத்தன்று பண்ணாரி மாரியம்மனுக்கு வஸ்திர மரியாதை செய்வதற்காக இரண்டாம் ஆண்டாக மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் செயல் அலுவலர் கிருஷ்ணா, உடுப்பி கோயில் செயல் அலுவலர் கோவிந்தராஜ், அர்ச்சகர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் வந்தனர். அவர்களுக்கு பண்ணாரி கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு நேற்று வழங்கப்பட்டது.
அதை தொடர்ந்து பண்ணாரி மாரியம்மனுக்கு 11.30 மணியளவில் நடைபெற்ற உச்சிகால பூஜையில் மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலில் இருந்து வந்தவர்கள் வஸ்திர மரியாதை செய்தனர். மைசூர் சாமுண்டீஸ்வரி கோவில் நிர்வாகிகள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், கோவில் துணை செயல் அலுவலர் மேனகா, பரம்பரை அறங்காவலர்கள் புருசோத்தமன், ராஜாமணி, தங்கவேல், அமுதா, பூசாரிகள் மற்றும் கோயில் பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.