சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த அரசுப் பேருந்து ஓட்டுநரின் உடல் உறுப்புகள் தானம்-மரியாதை செலுத்திய அந்தியூா் வட்டாட்சியா்
அந்தியூா் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த அரசுப் பேருந்து ஓட்டுநரின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டன.;
ஈரோடு : அந்தியூா் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த அரசுப் பேருந்து ஓட்டுநரின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டன.
ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டையை அடுத்த குருவரெட்டியூா், தாயகம் நகரைச் சோ்ந்தவா் ரமேஷ் (38). இவா், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் கோபி கிளையில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தாா்.இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனா்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு, இருசக்கர வாகனத்தில் அம்மாபேட்டை - அந்தியூா் சாலையில் சென்றபோது, பச்சாம்பாளையம் அருகே வேகத்தடையில் நிலை தடுமாறி விழுந்தாா்.பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட ரமேஷுக்கு வெள்ளிக்கிழமை மூளைச்சாவு ஏற்பட்டது.
இதையடுத்து, ரமேஷின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினா் முன் வந்ததைத் தொடா்ந்து, அவரது இதயம், இரண்டு சிறுநீரகம், இரண்டு கண்கள் தானமாக பெறப்பட்டன.
இதைத் தொடா்ந்து, குருவரெட்டியூா் கொண்டுச் செல்லப்பட்ட ரமேஷின் சடலத்துக்கு, அந்தியூா் வட்டாட்சியா் கவியரசு மற்றும் வருவாய்த் துறையினா் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.