ஈரோடு மாவட்டத்தில் ஊடு பயிராக பசுந்தீவனத்தை பயிரிட விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு
ஈரோடு மாவட்டத்தில் தீவன அபிவிருத்தி 2024-25 திட்டத்தின் கீழ், ஊடு பயிராக பசுந்தீவனத்தை பயிரிட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தீவனப் பற்றாக்குறையை போக்கவும், பசுந்தீவன உற்பத்தியை பெருக்கவும் ஒவ்வொரு ஆண்டும் மானியத்துடன் கூடிய பல்வேறு திட்டங்களை கால்நடை பராமரிப்புத்துறை செயல்படுத்திவருகிறது.
அதன்படி நடப்பாண்டில் தீவன மேம்பாட்டு திட்டத்தின்கீழ் பசுந்தீவன உற்பத்தியை பெருக்குவதற்காக விவசாயிகளுக்கு தோட்டங்கள் அல்லது தென்னந்தோப்புகளில் ஊடுபயிராக கால்நடைகளுக்கு ஏதுவான தீவன பயிர்களான தானிய பயிர்கள், புல் வகைகள், பருப்பு பயிர் வகைகளை பயிரிடும் திட்டம் மொத்தம் 275 ஏக்கர் அளவில் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தில் தீவன பயிர் உற்பத்தி செய்திட மானியமாக (நிலத்தை தயார் செய்தல் மற்றும் பயிரிட தேவையான விதைகள் & நாற்றுகள் வாங்கிட) தலா 1 ஏக்கருக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். தரச்சான்று பெற்ற தீவன விதைகள் மற்றும் நல்ல தரமுள்ள நாற்றுகளுக்கே மானியம் வழங்கப்படும். ஒரு பயனாளிக்கு குறைந்தபட்சம் அரை ஏக்கர், அதிகபட்சம் ஒரு ஹெக்டேருக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் சிறு குறு விவசாயிகள், பெண் விவசாயிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பை சேர்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். நீர் மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள விவசாயிகள், அதிகப்படியாக உற்பத்தி செய்யப்பட்ட தீவனத்தை நிலம் இல்லாத கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு குறைந்த விலைக்கு வழங்கிட விருப்பமுள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
அதிகப்படியாக உற்பத்தி செய்யப்பட தீவனத்தை ஊறுகாய்ப்புல் அல்லது வைக்கோல் போன்று பாதுகாத்திட விருப்பமுள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். எனவே தகுதிவாய்ந்த மற்றும் விருப்பமுள்ள விவசாயிகள் வரும் ஜூன் 30ம் தேதிக்குள் தங்கள் கிராமத்திற்கு உட்பட்ட கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்ட விவரங்களை பெற்று விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு 0424 2260513 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.