ஈரோட்டில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கிய ஆட்சியர்

ஈரோட்டில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா துவக்கி வைத்தார்.;

Update: 2025-02-10 11:00 GMT

ஈரோட்டில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா துவக்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் ஆசிரியர் குடியிருப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (பிப்ரவரி 10ம் தேதி) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு அல்பெண்டாசோல் மாத்திரைகளை வழங்கினார்.


பின்னர், அவர் தெரிவித்ததாவது, 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 2,080 அங்கன்வாடி மையங்கள் மற்றும் 311 துணை சுகாதார நிலையங்களிலும், 1,410 அரசு பள்ளிகள், 329 தனியார் பள்ளிகள் மற்றும் 63 கல்லூரிகளில் பயிலும் 19 வயது வரை உள்ள 7,25,892 மாணவ, மாணவியர்களுக்கும், 20 முதல் 30 வயது வரை உள்ள 1,75,531 பெண் பயனாளிகளுக்கு, 3,455 பணியாளர்களைக் கொண்டு தேசிய குடற்புழு நீக்க தின சிறப்பு முகாம்கள் மூலம் அல்பெண்டாசோல் மாத்திரைகள் வழங்கப்படுகிறது.

மேலும், விடுபட்டவர்களுக்கு வரும் பிப்ரவரி 17ம் தேதி மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது. எனவே. மேற்படி அனைவரும் குடற்புழு நீக்க தின சிறப்பு முகாமில் வழங்கப்படும் அல்பெண்டாசோல் மாத்திரைகள் பெற்று சாப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாணவ, மாணவியர்கள் தேசிய குடற்புழு நீக்க நாள் உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில், கூடுதல் இயக்குநர் (பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, சென்னை), மரு.சேரன். மாவட்ட சுகாதார அலுவலர் மரு.அருணா. நகர் நல அலுவலர் மரு.கார்த்திகேயன், தாய்-சேய் நல அலுவலர்கள் விஜயசித்ரா கௌசல்யா உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News