கோபி-சத்தி சாலையில், சாலை விரிவாக்க பணிகளுக்காக கோபியில் 117 மரங்கள் வெட்டி அகற்றம்
கோபி-சத்தி சாலையில், மூன்று கி.மீ., சாலை விரிவாக்க பணிகளுக்காக, நுாற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.;
ஈரோடு : கோபி-சத்தி சாலையில், மூன்று கி.மீ சாலை விரிவாக்க பணிகளுக்காக நுாற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.
கோபி அருகே கரட்டடிபாளையத்தை கடந்து, ஆசாரிமேடு முதல், மூலவாய்க்கால் வரை பிரதான சத்தி சாலை, 60 அடி அகலத்தை கொண்டது. அப்பகுதியின் இருபுறமும் தலா பத்து அடி வரை, சாலை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலை துறையினர் முடிவு செய்தனர். மொத்தம் மூன்று கி.மீ., தொலைவுக்கு, பிரதான சத்தி சாலையின் இருபுறமும் இடையூறாக இருக்கும் மரங்களை வெட்டி அகற்ற முடிவு செய்தனர்.
இதற்காக மரம் வெட்டும் பணி கடந்த நான்கு நாட்களாக நடந்தது. உதையன், வேப்பு, புளியமரம், அலங்கார கொண்டை, பனை, புங்கன் என, 117 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. நேற்றுடன் பணி முடிந்தது.
விரைவில் சாலை விரிவாக்கப்பணி தொடங்கும் என்று, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சாலை விரிவாக்கத்தின் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.