கோபி அருகே கல்குவாரி வெடி விபத்து சம்பவம்: 5 மாதங்களுக்கு பிறகு ஒருவர் கைது
ஈரோடு மாவட்டம் கோபி அருகே கல்குவாரி வெடி விபத்து சம்பவத்தில் 5 மாதங்களுக்கு பிறகு ஒருவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.;
கோபி அருகே கல்குவாரி வெடி விபத்து சம்பவத்தில் 5 மாதங்களுக்கு பிறகு ஒருவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் வனச்சாலை செல்லும் சாலையில் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் தனியார் (ஸ்டார் க்ரஷர் என்ற பெயரில்) கல்குவாரி செயல்பட்டு வந்தது. பெருந்துறை தாசநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த லோகநாதன் (வயது 70) என்பவருக்கு சொந்தமான இந்த குவாரியானது லோகநாதன் மனைவி ஈஸ்வரி (வயது 65) என்பவரது பெயரில் உரிமம் இருந்தது.
இந்த குவாரி சட்ட விரோதமாக செயல்பட்டு வந்ததாகவும், இரவு நேரத்தில் பாறைகளுக்கு வெடி வைத்து தகர்த்து வந்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த குவாரியில் தொழிலாளர்கள் வெடி வைத்து பாறைகளை தகர்க்கும் பணியில் ஈடுபட்ட போது வெடி விபத்து ஏற்பட்டு, கோபிசெட்டிபாளையம் குருமந்தூர் அயலூர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 50), கர்நாடக மாநிலம் பாலிமேடு கர்கேகண்டி பகுதியை சேர்ந்த அஜித்குமார் (வயது 27) ஆகிய இரண்டு தொழிலாளர்களும் இரத்த படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குவாரி உரிமையாளர் ஈஸ்வரி அவரது கணவர் லோகநாதன் மற்றும் மேலாளர் செல்வம், மேட்டூர் நங்கவல்லி பெரிய சோரகையை சேர்ந்த தங்கவேல் என்பவரது மகன் விஜய் (வயது 30) (ம்பர்ஷர் உரிமையாளர்) , குவாரி தொழிலாளர்களான டி.என்.பாளையம் கொளத்து மேடு உத்தமன் என்பவரது மகன் விவேகானந்தன் (வயது 36) மற்றும் டி.என்.பாளையம் கவுண்டம்பாளையம் காமாட்சி நகர் சண்முகம் என்பவரது மகன் பிரபு (வயது 34) டி.என்.பாளையம் பெரியார் வீதியை சேர்ந்த ரங்கநாதன் என்பவர் மகன் பிரகாஷ் (வயது 34) (குவாரி சூப்பர்வைசர்) என இதுவரை இந்த குவாரி வெடி விபத்து சம்பவத்தில் குவாரி உரிமையாளர் உட்பட 7 பேர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், டி.என்.பாளையம் ஹாஸ்டல் வீதியைச் சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் மணி (வயது 39) (கம்பர்ஷர் டிரைவர்) என்பவரை பங்களாப்புதூர் போலீசார் நேற்று கைது செய்து கோபி மாஜிஸ்திரேட் கோர்டில் ஆஜர்படுத்தி,ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர். இந்த குவாரி வெடி விபத்து சம்பவத்தில் 13 பேர் மீது வழக்கு செய்யப்பட்ட நிலையில் இதுவரை 8 பேர் கைது செய்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.