தர்மபுரி மாவட்டத்தில் 850 இடங்களில் தடுப்பூசி திருவிழா: கலெக்டர் தகவல்

தர்மபுரி மாவட்டத்தில் வரும் ஞாயிறன்று 850 இடங்களில் தடுப்பூசி திருவிழா நடைபெறும் என கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

Update: 2021-09-10 12:15 GMT

தர்மபுரி கலெக்டர் திவ்யதர்ஷினி.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி வெளியிட்டுள்ள அறிக்கையில், தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 2020 மார்ச் முதல் கொரோனா நோய் தொற்று பாதிப்பு இருந்து வருகிறது. முதல் அலை செப்டம்பர் 2020 மற்றும் இரண்டாம் அலை மே - 2021 ஆகிய மாதங்களில் மாவட்டத்தில் தீவிரமாக இருந்தது.

மாவட்ட நிர்வாகத்தின் தீவிர நடவடிக்கையால் ஆக்சிஜன் படுக்கை எண்ணிக்கைகள் உயர்த்தப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால், மாவட்டத்தில் இரண்டாம் அலை கட்டுக்குள் வந்து கொரோனா நோய் பாதிப்போரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.

மேலும், கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக இந்திய அரசாங்கத்தின் வழிகாட்டுதல் படி, தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து வழங்கப்பட்டு வந்தது. பின்னர் படிப்படியாக அனைத்து முன் களப்பணியாளர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் கடந்த 8ம் தேதி வரை 6,73,058 பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் மூலம் தினமும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

கோவிஷ்ல்டு முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 84 நாட்களுக்கு பிறகும், கோவாக்சின் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 28 நாட்களுக்கு பிறகும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். எனவே, தர்மபுரி மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட அனைவரும் கட்டாயம் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இதன் மூலம் கொரோனா நோய் பரவுவதை தடுக்கவும் மற்றும் மூன்றாம் அலை பாதிப்பில் இருந்து காத்துக்கொள்ளவும் உதவும்.

இதனைத்தொடர்ந்து, தமிழக முதலமைச்சரின் ஆணைக்கிணங்க வரும் ஞாயிற்றுக்கிழமை (12ம் தேதி) காலை 7 மணி முதல் மாலை 7 வரை மாவட்டம் முழுவதும் 850 இடங்களில் மாபெரும் தடுப்பூசி திருவிழா நடைபெற உள்ளது. எனவே 850 தடுப்பூசி மையங்களிலும் விடுபட்ட பயனாளிகள், முன்களப்பணியாளர்கள், போக்குவரத்துத்துறை ஊழியர்கள், ஆசிரியர்கள், மற்ற அரசு ஊழியர்கள், வணிகர் சங்கங்கள், மருத்துவ பிரதிநிதிகள் சங்கங்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், உணவக ஊழியர்கள், மருந்தக ஊழியர்கள், கோவில் மற்றும் சுற்றுலா தல ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள அனைவரும் கொரோனா தொற்றை ஒழிக்க முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், கைகழுவுதல், தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல் போன்ற நோய் தொற்று தடுப்பு வழிமுறைகளை கடைபிடித்து கொரோனா நோய் இல்லாத தர்மபுரி மாவட்டத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி, தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News