மருத்துவ காப்பீட்டில் 4 மாதங்களில் 4277 பேருக்கு சிகிச்சை - தர்மபுரி கலெக்டர் தகவல்

மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் 4 மாதங்களில் 4277 பேருக்கு பல்வேறு மருத்துவ சிகிச்சை -தர்மபுரி கலெக்டர் திவ்யதர்ஷினி

Update: 2021-10-06 05:15 GMT

தர்மபுரி மாவட்டத்தில் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் 4 மாதங்களில் 4277 பேருக்கு பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் : கலெக்டர் திவ்யதர்ஷினி தகவல்

தர்மபுரி மாவட்டத்தில் முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் 4 மாதங்களில் 4277 பேருக்கு பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்ட பயனாளிகளுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு தொகை உயர்த்தி வழங்கப்படுகிறது. இந்தத் திட்ட ஆண்டு விழா தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த 25 பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகளை வழங்கினார். மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர்(பொறுப்பு) ராஜ்குமார், மாவட்ட திட்ட அலுவலர் மோகன், மாவட்ட புலனாய்வு அதிகாரி பூபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்தத் திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 5 காப்பீட்டு திட்ட அலுவலர்கள், ஒருங்கிணைப்பாளர் மற்றும் அரசு மருத்துவமனையின் வார்டு மேலாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை நிகழ்ச்சியில் கலெக்டர் வழங்கினார்

தர்மபுரி மாவட்டத்தில் முதல்- அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் மூலம் கடந்த மே மாதம் 7- ந்தேதி முதல் செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வரை 4 மாதங்களில் 4277 பேர் ரூ.12 கோடியே 31 லட்சம் செலவில் பல்வேறு சிகிச்சைகள் பெற்று குணமடைந்துள்ளனர்.மாவட்டம் முழுவதும் இந்தத் திட்டத்தின் மூலம் பதிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு 3 லட்சத்து 95 ஆயிரத்து 586 காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏழை எளிய மக்கள் நோய் பாதிப்பில் இருந்து மீண்டு வர முதல்-அமைச்சர் உத்தரவுபடி கடந்த மே மாதம் 7- ந்தேதி முதல் தனியார் மருத்துவமனைகளில் முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் 646 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 97 லட்சத்து 2 ஆயிரத்து 400 தொகை சிகிச்சைக்காக அளிக்கப்பட்டுள்ளது என்று நிகழ்ச்சியில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News