பெருங்கற்கால சின்னங்கள் பாதுகாப்பு: தமிழக முதல்வருக்கு தருமபுரி எம்எல்ஏ நன்றி

பெருங்கற்கால ஈம நினைவு சின்னங்களை சுற்றிலும் வேலி அமைத்து பாதுகாக்க வேண்டுமென முதலமைச்சருக்கு கடிதமும் அளித்தேன்.

Update: 2021-09-26 05:15 GMT

தருமபுரி பாமக  எம் எல் ஏ வெங்கடேஸ்வரன்

தருமபுரி அருகே பெருங்கற்கால சின்னங்களை  பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவித்த தமிழக முதல்வருக்கு  பாமக எம் எல் ஏ வெங்கடேஸ்வரன்  நன்றி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தருமபுரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நல்லம்பள்ளி வட்டம், பங்குநத்தம் வருவாய் கிராமத்தில் புல எண் 61 அரசு கரடு புறம்போக்கு பரப்பு 18.67.0 ஹெக்டர் மற்றும் புல எண் 62 அரசு கரடு புறம்போக்கு பரப்பு 7.78.5 ஹெக்டர் ஆகிய அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் முறையே இராஜாகொல்லஅள்ளி மலை மற்றும் திப்பட்டி மலை ஆகியவை சேர்ந்து ஏகல்கெட்டு என்கிற பெயரில் வருவாய் ஆவணங்களில் இடம்பெற்று சுமார் 65 ஏக்கர் 34 சென்ட் உள்ளது.

இந்நிலங்களில் சுமார் 3000 ஆண்டுக்கு முற்பட்டதும், கி.பி.6ஆம் நூற்றாண்டுக்கு முந்தையதுமான சுமார் 400க்கும் மேற்பட்ட கல் திட்டைகள் மற்றும் மக்கள் வாழ்ந்த மேடான பகுதிகள் பெருங்கற்கால நினைவுச் சின்னங்களாக காணப்படுகின்றன. பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள் இருப்பதை அறியாமல் சில சமூக விரோதிகள் அச்சின்னங்களை சிதிலமடைய செய்து வருவதாக தெரியப்படுத்தியதை அறிந்து நான் 05.07.2021 அன்று அப்பகுதிக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு, பெருங்கற்கால ஈம நினைவு சின்னங்களை சுற்றிலும் வேலி அமைத்திடவும், சின்னங்கள் சிதிலமடையாமல் பாதுகாக்கவும், சமூக காடுகள் வளர்த்திடவும் சிறப்பு நிதி ஒதுக்க வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு கடிதமும் அளித்தேன்.

இந்த கோரிக்கையை ஏற்று, தருமபுரி அருகேயுள்ள பெருங்கற்கால ஈம நினைவு சின்னம் அமைந்துள்ள பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக 25.09.2021 அன்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. எனது கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக முதலமைச்சருக்கு  தொகுதி பொதுமக்கள் சார்பிலும், என் சார்பிலும் நன்றி பாராட்டுவதாக அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News