தர்மபுரி மாவட்டத்தில் நாளை 585 இடங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம்

தர்மபுரி மாவட்டத்தில் நாளை 6-வது மாபெரும் தடுப்பூசி முகாம் 585 இடங்களில் நடைபெறும் என கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

Update: 2021-10-22 05:30 GMT

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி தெரிவிக்கையில், தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 2020 மார்ச் முதல் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு இருந்து வருகிறது. முதல் அலை செப்டம்பர் - 2020 மற்றும் இரண்டாம் அலை மே-2021 ஆகிய மாதங்களில் மாவட்டத்தில் தீவிரமாக இருந்தது.

மாவட்ட நிர்வாகத்தின் தீவிர நடவடிக்கையால் ஆக்சிஜன் படுக்கை எண்ணிக்கைகள் உயர்த்தப்பட்டுத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் தர்மபுரி மாவட்டத்தில் இரண்டாம் அலை கட்டுக்குள் வந்து கொரோனா நோய் பாதிப்போரின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது.

கடந்த 20ம் தேதி வரை தர்மபுரி மாவட்டத்தில் முதல் தவணை 7,62,039 பயனாளிகளுக்கும், இரண்டாம் தவணை 2,33,586 நபர்களுக்கும் ஆக மொத்தம் 9,95,625 தவணை கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் மூலம் தினமும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

கோவிஷ்ல்டு முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 84 நாட்களுக்கு பிறகும், கோவாக்சின் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 28 நாட்களுக்கு பிறகும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் எனவே, தர்மபுரி மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட அனைவரும் கட்டாயம் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டும். இதன் மூலம் கொரோனா நோய் பரவுவதைத் தடுக்கவும் மற்றும் மூன்றாம் அலை பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ளவும் உதவும்.

கொரோனா மூன்றாம் அலையை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க மக்களுக்கு விரைந்து தடுப்பூசி செலுத்திடத் திட்டமிட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் மாவட்டம் முழுவதும் மாபெரும் கொரோனா தடுப்பூசி திருவிழா நடைபெற்று வருகிறது.

இதனைத்தொடர்ந்து வரும் 23ம் தேதி சனிக்கிழமை அன்று ஆறாம் கட்டமாக 585 இடங்களில் மாபெரும் தடுப்பூசி திருவிழா நடைபெறவுள்ளது. இதற்காக 86,215 தடுப்பூசி டோஸ்கள் பெறப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி முகாம்களை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் வட்டார அளவிலான துணை ஆட்சியர் தலைமையிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தும் பணிகளுக்காக மாவட்டம் முழுவதும் 50 வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே தர்மபுரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள 6-வது தடுப்பூசி திருவிழா மாவட்டம் முழுவதும் 585 தடுப்பூசி மையங்களில் நடைபெறவுள்ளது. விடுபட்ட 18 வயதுக்கு மேற்பட்ட நபர்கள், முன் களப்பணியாளர்கள், போக்குவரத்துத்துறை ஊழியர்கள், ஆசிரியர்கள், மற்ற அரசு ஊழியர்கள், வணிகர் சங்கங்கள், மருத்துவ பிரதிநிதிகள் சங்கங்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், உணவக ஊழியர்கள், மருந்தக ஊழியர்கள், கோவில் மற்றும் சுற்றுலாத் தல ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள அனைவரும் கொரோனா தொற்றை ஒழிக்க முககவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், கைகழுவுதல், தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல் போன்ற நோய் தொற்று தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து 100 சதவீத கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாவட்டமாக தருமபுரி மாவட்டத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News