தர்மபுரி மாவட்டத்தில் சட்ட விழிப்புணர்வு பிரச்சார வாகனம்: நீதிபதி தொடங்கி வைப்பு

தர்மபுரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த பிரச்சார வாகனத்தை மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி தொடங்கி வைத்தார்.

Update: 2021-10-30 04:45 GMT

தர்மபுரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாகன பிரசாரத்தை துவக்கி வைத்த மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி.

தர்மபுரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாகன பிரச்சாரத்தை மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தர்மபுரி கோர்ட்டு வளாகத்தில் செயல்படும் மாற்றுமுறை தீர்வு மையத்தில் இருந்து பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நடமாடும் சட்ட விழிப்புணர்வு வாகன பிரச்சார தொடக்க விழா நேற்று நடந்தது. இதை மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் சட்ட விழிப்புணர்வு குறும்படத்தையும் அவர் பார்வையிட்டார்.

அப்போது பேசிய மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி, சட்ட விழிப்புணர்வு முகாம் குறித்தும், சட்ட உதவிகள் பெற தகுதியானவர்கள் குறித்தும், எந்தெந்த வழக்குகளில் சட்ட உதவிகள் அளிக்கப்படும் என்பது குறித்தும் இந்த வாகன பிரச்சாரம் மூலம் தர்மபுரி மாவட்டத்தில் 5 நாட்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதன்படி தர்மபுரி, நல்லம்பள்ளி தாலுகா பகுதிகளில் தற்போது விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.

பாப்பிரெட்டிப்பட்டியில் இன்றும் (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) அரூரிலும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பாலக்கோடு, 2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பென்னாகரம் தாலுகா பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படுகிறது. வக்கீல்கள், சட்ட தன்னார்வலர்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிநவீன வாகனம் மூலம் சட்ட விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை குறித்த குறும்படங்கள் திரையிடப்படுகின்றன.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் குறிப்பிட்ட தாலுகா பகுதிகளில் நடமாடும் சட்ட விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தில் ஒளிபரப்பாகும் வீடியோக்களை பார்த்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அவர் பேசினார்.

முன்னதாக நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மாவட்ட நீதிபதி ராஜா வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதி மோனிகா, மாவட்ட விரைவு மகளிர் நீதிபதி சையத் பக்ரத்துல்லா, குடும்பநல நீதிபதி செல்வமுத்துகுமாரி, மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு ராஜ்குமார், மாவட்ட முதன்மை சார்பு நீதிபதி கோகுலகிருஷ்ணன், கூடுதல் சார்பு நீதிபதி மோகனரம்யா, சிறப்பு சார்பு நீதிபதி மைதிலி, மாவட்ட உரிமையியல் நீதிபதி சாந்தி, ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு செல்வராஜ், மாவட்ட அரசு வக்கீல்கள் முருகன், நந்திவர்மன் மற்றும் நீதித்துறை அதிகாரிகள், வக்கீல்கள், கோர்ட்டு பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் கலைவாணி நன்றி கூறினார்.

Tags:    

Similar News