தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கோவிந்தசாமி எம்.எல்.ஏ. தர்ணா

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் கோவிந்தசாமி எம்.எல்.ஏ. தர்ணா போராட்டம் நடத்தினார்.

Update: 2022-01-13 01:54 GMT

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கோவிந்தசாமி எம்.எல்.ஏ. தர்ணா போராட்டம் நடத்தினார்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ.வாக அ.தி.மு.க.வை சேர்ந்த ஏ.கோவிந்தசாமி இருந்து வருகிறார். தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாக்கள் மற்றும் தொகுதி வளர்ச்சி திட்ட பணிகளில் தொகுதி எம்.எல்.ஏ.க்களை, மாவட்ட நிர்வாகம் புறக்கணித்து வருவதாக கூறி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில், தரையில் திடீரென அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

நேற்று காலை பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கடத்தூர் பேரூராட்சியில் ரூ.1.18 கோடி மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கு தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார், பணியினை தொடங்கி வைத்துள்ளார். இதனை முன்கூட்டியே தகவல் தெரிந்து, ஆட்சியருக்கு தகவல் தெரிவித்தேன். ஆனால் இதுபோன்று நடைபெறாது என ஆட்சியர் த.திவ்யதர்சினி தெரிவித்தார்.

ஆனால் இன்று தி.மு.க. எம்.பி.யை வைத்து பணியினை தொடங்கி வைக்கிறார்கள். என் சட்டமன்ற தொகுதியில், எனக்கு அழைப்பு கொடுக்கவில்லை. இதனால் எனக்கு உரிய நீதி கிடைக்கும் வரை, அரசு தலைமை செயலாளர் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை தர்ணாவில் ஈடுபடுவதாக தெரிவித்தார்.

மேலும் அரசு விழாக்களுக்கு அழைப்பிதழ் கொடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், தி.மு.க. மாவட்ட செயலாளராக செயல்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினியை கண்டித்தும் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தார். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.வுடன் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வினோத் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் அவர் தனக்கு உரிய நீதி கிடைக்கும் வரை, தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றார். சுமார் ஒரு மணி நேரமாக நடந்த தர்ணா போராட்டத்தை, முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், நேரில் வந்து பேச்சு வார்த்தை நடத்தி, மாவட்ட ஆட்சியரிடம் உரிய மரியாதை கிடைக்காது. எனவே அரசின் தலைமை செயலாளரிடம் புகார் தெரிவிக்கலாம் என கூறி, சமரசம் செய்து அழைத்து சென்றார்.

Tags:    

Similar News