தர்மபுரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு- 800 போலீசார் தீவிர கண்காணிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி 800 போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2022-01-09 07:16 GMT

தர்மபுரியில்  ஊரடங்கை மீறி சாலயைில் சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

தமிழகத்தில் அதிவேகமாக பரவி வரும் ஒமிக்ரான் மற்றும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முழு ஊரடங்கு நேற்று இரவு 10 மணி முதல் நாளை காலை 5 மணி வரை உள்ளது.

இதையொட்டி தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம், நல்லம்பள்ளி ஆகிய 7 தாலுகாக்களுக்கு உட்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்தநிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேலும் ஒரு கட்டுப்பாட்டு நடவடிக்கையாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல மற்றும் மாவட்டத்துக்குள் அவசர பயணத்துக்காக செல்பவர்களிடம் தக்க சான்றுகள் உள்ளனவா என கவல்துறையினர் பரிசோதனையில் ஈடுபட்டனர்.

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள எல்லை பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 11 சோதனைச்சாவடிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் மேற்பார்வையில் நேற்று இரவு முதல் வாகனங்களில் வந்தவர்களிடம் சோதனை நடத்தினார்கள்.

அப்போது வாகனங்களில் செல்பவர்கள் அத்தியாவசிய தேவைகள், அவசிய மருத்துவத் தேவைகளுக்காக செல்கிறார்களா? என்பதை முழுமையாக விசாரித்த பின்னரே மேற்கொண்டு செல்ல அனுமதித்தனர். முழு ஊரடங்கையொட்டி தருமபுரி பஸ் நிலையம் முஹம்மத் கிளப் ரோடு ஆறுமுக ஆசாரி தெரு ,நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாலை, தர்மபுரி முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

பால்வண்டி ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டது. தர்மபுரியில் டி.எஸ்.பி.வினோத் மேற்பார்வையில் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் 800 போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News