தொப்பூர் கணவாயில் மீன் லாரி கவிழ்ந்து விபத்து: 3 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

தொப்பூர் கணவாயில் முன்னாள் சென்ற லாரி மீது மீன் லாரி மோதி கவிழ்ந்ததில் 2 டிரைவர்கள் படுகாயமடைந்தனர்.

Update: 2021-09-06 15:00 GMT

கவிழ்ந்து விபத்துக்குள்ளான மீன் லாரி.

ஹைதராபாத்திலிருந்து திருச்சிக்கு சேர்கள் ஏற்றிக்கொண்டு இன்று மாலை லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை ஓசூர் அடுத்த வேப்பனப்பள்ளியைச் சேர்ந்த டிரைவர் போட்டப்பா (வயது 25) என்பவர் ஓட்டி வந்தார். இவருடன் மாற்று டிரைவராக அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 25) என்பவரும் லாரியில் வந்து கொண்டிருந்தார்.

இந்த லாரி தர்மபுரி-சேலம் நெடுஞ்சாலையில் தர்மபுரி மாவட்டம், தொப்பூர் கணவாயில் வந்து கொண்டிருந்தது. அப்போது பின்னால் ஆந்திராவில் இருந்து கேரளா மாநிலம் பாலகாடுக்கு மீன்கள் ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி வந்தது. இந்த லாரியை விஜயவாடா பகுதியைச் சேர்ந்த டிரைவர் சாய் (வயது.33) என்பவர் ஓட்டி வந்தார். மாற்று டிரைவராக மோகன்ராஜ் (வயது 33) என்பவரும் வந்தார்.

இந்த லாரி தொப்பூர் கணவாயில் செல்லும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னே சேர் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி மீது மோதி நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் சாய் மற்றும் மாற்று டிரைவர் மோகன்ராஜ் படுகாயமடைந்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தொப்பூர் போலீசார் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தால் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் தர்மபுரி - சேலம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால் தர்மபுரியில் இருந்து சேலம் செல்லும் வாகனங்கள் ஒருவழிப் பாதையில் திருப்பி விடப்பட்டன. இதனால் வாகன நெரிசலால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மேலும் இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News