அரசு மருத்துவமனையில் மயங்கி விழுந்தவருக்கு ஆக்சிஜன் சிகிச்சை.!

மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் இருந்து கொரோனா தொற்று உறுதியானவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார்கள்.

Update: 2021-04-28 02:40 GMT

தருமபுரியில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்வதற்கு தினமும் ஏராளமானோர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர். இந்த கூட்ட நெரிசலில் மயங்கி விழுந்த ஒருவருக்கு மருத்துவனை ஊழியர் ஒருவர் ஆக்சிஜன் வைத்து சிகிச்சை அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தருமபுரி மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தாலும், தொற்று எண்ணிக்கை தினமும் உயர்ந்து கொண்டே செல்கிறது. அதிலும் கடந்த 2 வாரங்களாக ஒற்றை இலக்கத்துடன் இருந்த தொற்று எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து தற்போது 200ஐ தொடும் அளவிற்கு உயர்ந்துவிட்டது.

இந்நிலையில், மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் இருந்து கொரோனா தொற்று உறுதியானவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார். அப்படி அனுமதிக்கப்படும்போது, அவர்கள் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அருகாமையில் வசித்து வருபவர்களும் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்காக மருத்துவமனையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

அது போன்று தருமபுரி அரசு மருத்துவமனை காய்ச்சல் பிரிவில் கொரோனா பரிசோதனை செய்வதற்கு ஏராளமானோர்கள் குவிந்து வந்தனர். அப்போது அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஒருவர் மயங்கி கீழே விழுந்துவிட்டார். அவருடன் வந்த மனைவி தனது கணவரை காப்பாற்றுங்கள் என்று கண்ணீர் விட்டு கதறினார்.

இதனையடுத்து மருத்துவமனை ஊழியர் உடனடியாக விரைந்து சென்று மயக்கமடைந்தவருக்கு ஆக்சிஜன் செலுத்தி சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் தொற்று காரணமாக பொதுமக்கள் மிகுந்த பயத்துடனேயே காணப்படுகின்றனர்.

Tags:    

Similar News