தர்மபுரி புறநகர் பஸ் நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு

ரூ.78 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட தர்மபுரி புறநகர் பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது

Update: 2022-01-28 04:15 GMT

தர்மபுரி புறநகர் பேருந்து நிலையம் திறக்கபட்டு வழக்கம்போல் இன்று இயங்கியது

தர்மபுரி புறநகர் பேருந்து நிலையத்துக்கு தினமும் 450 பேருந்துகள் வந்து செல்கின்றன. இதுமட்டுமல்லாமல் பேருந்து பயணிகள் மற்றும் பொதுமக்கள் என மொத்தம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு இந்த புறநகர் பேருந்து நிலையத்தில் தார்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை நாளடைவில் குண்டும், குழியுமாய் போக்குவரத்துக்கு உபயோகம் அற்ற நிலையில் காணப்பட்டது. இதன் காரணமாக பேருந்துகள் வந்து செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. மேலும் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளும் நடந்து வந்தது.

இந்த நிலையில் பேருந்து நிலையத்துக்கு வரும் பேருந்துகள் குண்டும், குழியுமான சாலையில் இயக்கப்படுவதால் அடிக்கடி  பழுதடைவதுடன் டயர்கள் பஞ்சர் ஆகும் நிலை ஏற்படுகிறது. மேலும்  இறங்கும் பயணிகள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டது.

இதனால் புறநகர் பேருந்து நிலையத்தில் பழுதடைந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என்று அரசு போக்குவரத்து கழகம் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இதே போன்று பேருந்து நிலையத்தில் புதிய தார்சாலை உடனே அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து புறநகர் பேருந்து நிலையத்தில் புதிய தார்சாலை அமைக்க கலெக்டர் திவ்யதர்ஷினி நகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அதன்படி தர்மபுரி நகராட்சி சார்பில் புறநகர் பேருந்து நிலையத்தில் மத்திய நிதி குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.78 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. புதிய தார் சாலை அமைக்கும் பணி கடந்த 25 ந்தேதி தொடங்கப்பட்டது. இதற்காக பேருந்து நிலையத்தில் உள்ள அனைத்து கடைகளும் 3 நாட்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பழைய தார் சாலைகளை அகற்றும் பணி நடைபெற்றது. ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் மேடு பள்ளங்கள் சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது

இந்த பணிகளை நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார், நகராட்சி பொறியாளர் ஜெயசீலன், உதவி பொறியாளர் சரவணபாபு மற்றும் அதிகாரிகள் மேற்பார்வையில் நடந்து முடிந்தது. இந்த தார் சாலை பணிகளை விரைந்து முடித்து இன்று காலை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

Tags:    

Similar News