குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள் - பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு

குறைவான வாடகையில் வேளாண் இயந்திரங்களை, பெற்று விவசாயிகள் பயனடையுமாறு தருமபுரி கலெக்டர் திவ்யதர்சினி அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2021-07-15 12:15 GMT

மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி

இதுகுறித்து, தருமபுரி ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசு வேளாண் பெருமக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போதுள்ள வேலையாட்கள் பற்றாக்குறையை சமாளித்து, வேளாண் பணிகளை குறித்த காலத்தே செய்து முடிப்பதற்காக, வேளாண்மைப் பொறியியல் துறை பல்வேறு புதிய, நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்கி, விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்கி வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மிகுந்த பயன் தரக்கூடிய வேளாண் இயந்திரங்களான இரண்டு மண் தள்ளும் இயந்திரங்கள், ஏழு டிராக்டர்கள், இரண்டு சக்கர வகை மண் அள்ளும் இயந்திரங்கள் இருப்பில் உள்ளன. மேலும், மண் தள்ளும் இயந்திரம் மூலம் நிலம் சமன் செய்தல், உழவு பணி (5 கொழுகலப்பை, சட்டி கலப்பை, ஒன்பது கொழுகலப்பை, சுழற்கலப்பை) கரும்பு/காய்கறி நாற்று நடவு செய்தல், நிலத்தில் நிலக்கடலை பயிரை தோண்டி எடுத்து, நிலக்கடலைகளை பறித்தல், சோளத்தட்டை அறுவடை செய்யும் கருவி உள்ளிட்ட பல்வேறு வேளாண் பணிகளை மேற்கொள்வதற்கும், டிராக்டரால் இயங்கக்கூடிய மேற்காணும் கருவிகள் வேளாண் பொறியியல் துறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

டிராக்டரால் இயங்கக்கூடிய அனைத்து கருவிகளும்,  டிராக்டருடன் மணிக்கு ரூ.340/- என்ற குறைந்த வாடகை அடிப்படையில் விவசாயிகளுக்கு முன்னுரிமை தந்து வாடகைக்கு வழங்கப்படுகின்றன. மண்தள்ளும் இயந்திரம் மூலம் நிலம் சமன் செய்ய மணிக்கு ரூ.840/- என்ற குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்படுகின்றன. சக்கர வகை மண் அள்ளும் இயந்திரங்கள் மணிக்கு ரூ.660/-க்கும் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்படுகின்றன.

எனவே, மேலே குறிப்பிட்ட வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தேவைப்படும் விவசாயிகள் கீழ்க்கண்ட முகவரியில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உபகோட்ட அலுவலகத்தை அணுகி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்க்தொடர்புக்கு கீழ்கண்ட அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ச.திவ்யதர்சினி, தெரிவித்துள்ளார்.

உதவி செயற்பொறியாளர் (வே.பொ) தருமபுரி  - அலைபேசி எண்: 94432 67032, அலுவலக தொலைப்பேசி எண்: 04342-296132.

உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அரூர் - அலைபேசி எண்: 9443194675, அலுவலக தொலைப்பேசி எண்: 04346-296077

செயற்பொறியாளர் (வே.பொ) தருமபுரி - அலைபேசி எண்: 9443636835, அலுவலக தொலைப்பேசி எண்: 04342-296948

Tags:    

Similar News