குப்பை மேலாண்மைக்கு ரூ.176 கோடி: அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பியது மாநகராட்சி
கோவை மாநகராட்சியில் குப்பை மேலாண்மை பணிக்கு ரூ.176.06 கோடிக்கு திட்ட அறிக்கை தயாரித்து, தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.;
கோப்புப்படம்
கோவை மாநகராட்சி பகுதியில், நாளொன்றுக்கு, 1,100 டன் குப்பை சேகரமாகிறது. இவற்றை மக்கும், மக்காதவை என தரம் பிரித்து சேகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வெள்ளலூர் கிடங்கில் கொட்டியுள்ள பழைய குப்பையை 'பயோ மைனிங்' முறையில் அழிக்கப்படுகிறது. அடுத்த கட்டமாக, 53.8 ஏக்கர் பரப்பளவில், 8.28 லட்சம் கன மீட்டர் பழைய கழிவுகளை மறுசுழற்சி செய்ய, ரூ.51.98 கோடிக்கு மதிப்பீடு தயாரித்து, அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
மேலும், 100 டன் உலர் மற்றும் ஈரக்கழிவுகளை மறுசுழற்சி செய்து, 'பயோ காஸ்' தயாரிக்க, ரூ.37.83 கோடிக்கு திட்ட அறிக்கை தயாரித்து, அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
துாய்மை பாரதம் 2.0 திட்டத்தில் ரூ.6 கோடியில் கட்டட கழிவு மறுசுழற்சி மையம் கட்டுவதற்கும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மேலும், 200 டன் உலர் மற்றும் ஈரக்கழிவுகளை இயந்திரம் மூலம் எரியூட்டி கிடைக்கும் பொருட்கள் மூலம் 'பேவர் பிளாக்' கற்கள் உருவாக்கும் திட்டத்தை ரூ.45 கோடியில், தனியார் பங்களிப்புடன் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இவை தவிர, மக்கும் குப்பையில் உரம் தயாரிக்கும் மையங்களை செயல்படுத்துவதற்கான பணிகளும் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன. இவற்றின் மூலம் தினமும், 48 டன் உலர் குப்பைகள் வெள்ளலூர் கிடங்கிற்கு செல்லாமல் உரம் தயாரிக்கும் மையங்களிலேயே அழிப்பதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி சுகாதாரப் பிரிவினர் மேற்கொள்கின்றனர்.
மேலும், துாய்மை பாரதம் திட்டத்தில், பொக்லைன் வாகனம், மண் அள்ளும் இயந்திரங்கள், குளங்களில் ஆகாயத்தாமரை அகற்றும் இயந்திரம், சாலை சுத்தம் செய்யும் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் கொள்முதல் செய்ய, நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் அனுமதி அளித்திருக்கிறார். நடப்பு நிதியாண்டு இந்த வியந்திரங்களும், வாகனங்களும் தருவிக்கப்பட உள்ளன.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், குப்பை மேலாண்மை திட்டத்தில், ரூ.176.06 கோடிக்கு திட்ட அறிக்கை தயாரித்து, 15வது நிதிக்குழு மற்றும் துாய்மை பாரதம் 2.0 திட்டத்தில் நிதி பெறுவதற்கு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டிருக்கிறது. விரைவில் நிதி ஒதுக்கீடு பெற்று, பணிகள் துவக்கப்படும் என்று கூறினர்.