சென்னையின் தீண்டா நகரம்: கண்ணப்பர் திடல் மக்களுக்கு விடிவு எப்போது?

ரிப்பன் பில்டிங் அருகே கண்ணப்பர் திடல் பகுதியில் வாழும் மக்கள் பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இன்றி, மோசமான வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர்;

Update: 2023-04-17 04:44 GMT

கண்ணப்பர் திடல் பகுதியில் உள்ள வீட்டின் நிலையை சுட்டிக்காட்டும் குடியிருப்பாளர்

சென்னை பெரியமேடு பகுதிக்கு அருகில் உள்ள அமைந்துள்ளது கண்ணப்பர் திடல் எனும் பகுதி. இங்கு வாழும் மக்கள் பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இன்றி, மோசமான வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். பலமுறை அரசிடம் மனுகொடுத்தும் போராட்டங்கள் நடத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு கட்டும் குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு பணம் கேட்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள் கண்ணப்பர் திடல் மக்கள்.

ரிப்பன் கட்டிடத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் கண்ணப்பர் திடல் உள்ளது, இங்குள்ள நூற்றுக்கணக்கான வீடுகள்உடைந்த கதவுகள் மற்றும் கசிவு சுவர்கள் கொண்ட மங்கலான அறைகளில் வசிக்கும் ஒரு குடியிருப்புத் தொகுதி ஆகும். இது கால்நடைகளுக்கு கூட பொருந்தாத இடங்கள். மேலும், கழிப்பறை வசதியும் இல்லை. இங்குள்ள ஆண்கள் தினக்கூலிகளாகவும், பெண்கள் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். பல இளைஞர்கள் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை நிறுத்தி போதைப்பொருள் வியாபாரிகளாக மாறியுள்ளனர்.

சென்னை மாநகரின் வளர்ச்சிக்கான வரலாற்றில் மண்ணின் பூர்வீக குடிகளின் பங்கு முக்கியமானது. சென்னையில் தூய்மைப் பணி முதல் மிகப்பெரிய கட்டடங்களில் வண்ணம் பூசும் பணி வரை அனைத்து உடல் உழைப்புத் தொழில்களையும் சாலையோரம் வசிப்பவர்களே இரவு பகல் பாராது செய்து வருகின்றனர்.

கடந்த 1994 ஆம் ஆண்டு வரை நேரு உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்படுவதற்கு முன்பு சென்னை சென்ட்ரல், ரிப்பன் மாளிகை, தற்போதுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கம் அமைந்திருக்கும் பகுதிகளை சுற்றி சாலையோரம் வசித்து வந்த மக்கள், விரைவில் அரசின் சார்பில் வீடுகள் கட்டித் தரப்படும் என்ற வாக்குறுதியோடு சென்னை சூளை பகுதியில் உள்ள கண்ணப்பர் திடல் பகுதிக்கு அப்புறப்படுத்தப்பட்டார்கள்.

ஆனால், அந்த வாக்குறுதி இன்று வரை நிறைவேற்றப்படாததால் அங்கு வாழும் சுமார் 200 குடும்பங்களின் வாழ்க்கை பரிதாப நிலையில் உள்ளது. சுகாதாரம், தூய குடிநீர், கழிப்பிட வசதி போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.


வீடற்றவர்களின் விடுதி என அழைக்கப்படும் கண்ணப்பர் திடல் பகுதி மக்கள், இதுவரை பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் எந்த பயனும் ஏற்படவில்லை.

மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் வளர்ச்சி மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை வழங்குவதாக வாக்குறுதி அளித்து வந்தனர்.

“அரசு இயந்திரம் பொதுவாக எங்கள் இருப்பை புறக்கணிக்கிறது, ஆனால் அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் எங்களை சந்திப்பதை உறுதி செய்கிறார்கள். அதன்பிறகு, அவர்களிடமிருந்தும் அதிகாரிகளிடமிருந்தும் எந்த தொடர்பும் இல்லை, ”என்று புலம்புகின்றனர். எப்போதும் போல, தேர்தல் பிரசாரங்களின் போது உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்கள் வீட்டு வாசலில் காணப்பட்டனர். ஆனால் அவர்கள் வென்ற பிறகு, இந்த பகுதியை திரும்பிப் பார்க்கவில்லை.

இரவு நேரங்களில், பொது கழிப்பறைகள் மூடப்படுவதால், பெண்கள் அவதிப்படுகின்றனர். சில சமயங்களில், திறந்தவெளியில் மலம் கழிக்க கிட்டத்தட்ட 2 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்கின்றனர்

இந்த ஆண்டு ஜனவரி மாதம், அந்தத் தொகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் உரிய வீடுகள் கோரி ரிப்பன் கட்டிடத்தில் போராட்டம் நடத்தினர்.

அதன்பிறகுதான் மேயர் பிரியாவும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியும் எங்கள் தொகுதிக்குச் சென்று நாங்கள் வாழும் மனிதாபிமானமற்ற நிலைமைகளைப் பார்த்தனர். ஆணையர் மாநகராட்சிக்கு சில சீரமைப்புப் பணிகளைச் செய்ய உத்தரவிட்டார் மேலும் அருகிலுள்ள TNUHDB (தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) யில் குடியமர்த்துவதாக உறுதியளித்தார்.

ஆனால் இது வரை எதுவும் நடக்கவில்லை. புனரமைப்பு இல்லை, மீள்குடியேற்றம் பற்றி ஒரு கிசுகிசு கூட இல்லை. அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் பொய்யான வாக்குறுதிகளால் சோர்வடைந்து சலித்துப்போன ஒருவர் “ரிப்பன் கட்டிடம் இங்கிருந்து 1 கி.மீ. தான். இருந்தும் என்ன பயன்? என விரக்தியாக கூறினார்

கேஸ் சிலிண்டர் வைக்க போதிய இடவசதி இல்லாததால், பெண்கள் வராண்டாவில் சமையலுக்கு விறகுகளை பயன்படுத்துகின்றனர். கொசுக்கடிகளில் இருந்து தப்பிக்க, இங்குள்ள அனைத்து வீடுகளிலும் புகை போடுகின்றனர் . வெளியேறும் புகை சுவாச நோய்களை அதிகரிக்கிறது.

இங்கு வசிப்பவர்கள் மற்றொரு சிக்கலை எதிர்கொள்கின்றனர். இந்த தொகுதியில் உள்ள பல இளைஞர்கள் போதைப்பொருளுக்கு குறிப்பாக கஞ்சாவுக்கு அடிமையாகி உள்ளனர். இங்குள்ள மாணவர்களில் கிட்டத்தட்ட 30% பேர் பள்ளியை விட்டு வெளியேறியுள்ளனர், இங்குள்ள பெரும்பாலான ஆண்கள் தினசரி கூலிகள் மற்றும் பெண்கள் அருகிலுள்ள வீடுகள் மற்றும் நிறுவனங்களில் கூலி வேலை செய்கிறார்கள். அவர்கள் தங்கள் டீன்ஏஜ் குழந்தைகளை வீட்டிலேயே விட்டுச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், அவர்கள் கஞ்சா அடிப்பவர்களுக்கு எளிதான இலக்காகிறார்கள்.

இத்தொகுதியில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. 3-5 மாணவர்கள் மட்டுமே உயர்கல்வி பயின்று வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இங்கு வசிப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைப்பது சவாலாக உள்ளது. பட்டதாரியான ராஜேஷ், உணவு டெலிவரி செய்யும் சிறுவனாக வேலை செய்கிறார், ஏனெனில் அவரது ஆவணங்களில் உள்ள முகவரி வெள்ளை காலர் வேலையைப் பெறுவதில் அவருக்கு பாதகமாக உள்ளது.

"கல்வி இல்லாமல், நாங்கள் தெருவில் கிடந்தோம். எனவே, நாங்கள் எங்கள் மகனுக்கு கல்வி கற்பித்தோம். ஆனால் இங்கு வசிப்பதால் அவருக்கு வேலை கிடைக்காமல் போனது என்றால் அது அநியாயம்” என்று அவரது பெற்றோர் கூறினர்.

அவர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் தற்போதைய திமுக அரசு வீடுகள் விரைவில் கட்டித் தரப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது.

தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஐ.பரந்தாமன் இந்த பிரச்சினையை கவனித்து வருவதாகவும், குடும்பங்களுக்கு சரியான குடியிருப்பை வழங்குவதே தனது குறிக்கோள் என்றும். இந்தத் தொகுதி மட்டுமின்றி, தனது பதவிக் காலம் முடிவதற்குள் தொகுதியில் தெருவோரங்களில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் வீட்டு மனைகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதாகவும் கூறினார்

Tags:    

Similar News