செங்கல்பட்டு: தனியார் கார் பார்க்கிங்கான அரசு நிலம்- மீட்பு நடவடிக்கை பாயுமா?

செங்கல்பட்டில் தனியார் கார் பார்க்கிங்காக மாறிவரும் அரசு நிலத்தை மீட்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2021-06-05 11:34 GMT

கார் பார்க்கிங்காக மாறியுள்ள் நகராட்சி நிலம்.

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே புதியதாக தனியார் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படவில்லை. இதனால் அருகில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து வாகன நிறுத்தும் இடமாக மாற்றியுள்ளனர்.

இந்த தனியார் மருத்துவமனை ஆக்கிரமித்துள்ள அரசு நிலத்தை மீட்கக்கோரி நகராட்சி அதிகாரிகளிடம் இந்து மக்கள் கட்சி சார்பிலும், சமூக ஆர்வலர்கள் சார்பிலும் பலமுறை புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து இந்து மக்கள் கட்சியின் செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் சண்முகம் கூறுகையில், செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்துக்கு மிக அருகாமையில் உள்ள இந்த அரசு நிலத்தை தனியார் மருத்துவமனை ஆக்கிரமித்து வாகன நிறுத்துமிடமாக மாற்றியுள்ளது கண்டிக்கத்தக்கது.

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையதிலிருந்தும், ரயில் நிலையத்திலிருந்தும் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த இடமில்லாத சூழ்நிலையில் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர். இதன் காரணமாக நாள் ஒன்றுக்கும் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் திருடுபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த தனியார் மருத்துவமனை ஆக்கிரமித்துள்ள நிலத்தை மீட்டு முறைப்படி இரு சக்கர வாகனம் நிறுத்தும் இடமாக மாற்றினால் நகராட்சி நிர்வாகத்துக்கு அதிக வருவாயும் ஈட்டலாம், அல்லது தற்காலிக கடைகளை அமைத்து வாடகைக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் செயல்படுத்தினால் பல லட்சம் ரூபாய் வருவாயாக ஈட்டலாம். எனவே தனியார் மருத்துவமனை ஆக்கிரமித்துள்ள பல கோடி ரூபாய் பதிப்பிலான நிலத்தை மீட்டு நகராட்சி நிர்வாகம் அரசுக்கு வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News