செங்கல்பட்டு வீட்டுவசதி துணைப்பதிவாளர் பணிநீக்கம்: ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

தொடர்ந்து ஊழியர் விரோதப் போக்குடன் சர்வாதிகார மனநிலையில் செயல்பட்டுவருவதாக ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்

Update: 2023-06-25 15:00 GMT

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழுக்கூட்டம் மாநிலத் தலைவர் தி.க.ராமசாமி தலைமையில்  நடைபெற்றது

செங்கல்பட்டு வீட்டுவசதி துணைப்பதிவாளரை பணிநீக்கம் செய்ய கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தொடர்ந்து ஊழியர் விரோதப் போக்குடன் சர்வாதிகார மனநிலையில் செயல்பட்டுவரும் செங்கல்பட்டு வீட்டுவசதி துணைப் பதிவாளரை பணிநீக்கம் செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழுக்கூட்டம் மாநிலத் தலைவர் தி.க.ராமசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் க.பிச்சைவேலு, பொருளாளர் ச.பாலகிருஷ்ணன் ஆகியோர் அறிக்கைகளை முன்மொழிந்து பேசினர். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஜெ.ஜபருல்லா, செயலளார் ஆர்.ரெங்கசாமி, சங்கத்தின் முன்னாள் மாநில பொருளாளர் கி.ஜெயபாலன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநில நிர்வாகிகள் தீர்மானங்களை முன்மொழிந்தனர்.

திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதிய முறையைத் தொடர வேண்டும். கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு நிதிப்பலன்களை திரும்ப வழங்க வேண்டும். தொடர்ந்து ஊழியர் விரோதப் போக்குடனும், தரக்குறைவான வார்த்தைகளைப் பிரயோகித்தும் சர்வாதிகார மனநிலையுடன் செயல்படும் செங்கல்பட்டு வீட்டுவசதி துணைப் பதிவாளரை பணிநீக்கம் செய்ய வேண்டும்.

பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவுக் காவலர், இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். அரசாணைக்கு புறம்பாக ஐந்து ஆண்டுகளுக்கு மேல் இயக்குனர் பணியிடத்தில் தொடர்ந்து பணிபுரிந்துவரும் பால் கூட்டுறவு தணிக்கைத்துறை இயக்குனர் பிரமிளாவை உடனடியகா பணிமாறுதல் செய்ய வேண்டும். நடப்பாண்டுக்கான துணைப்பதிவாளர் பதவி உயர்வினை விரைந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவெற்றப்பட்டன.

முன்னதாக மாநில செயற்குழு உறுப்பினர் பா.ஆனந்தம் வரவேற்க, மாநில செயலளார் விகேஏ.மனோகரன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்டச் செயலாளர் டி.வினிதா நன்றி கூறினார்.

Tags:    

Similar News