‘நீங்க தான் அடுத்த முதல்வர்’ அரசு விழாவில் அமைச்சர் நேருவிற்கு அதிர்ச்சி

‘நீங்க தான் அடுத்த முதல்வர்’ என அரசு விழாவில் அமைச்சர் நேருவை பார்த்து அர்ச்சகர் கூறியதால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

Update: 2023-12-15 14:34 GMT

திருச்சி ஸ்ரீரங்கம் பஸ் நிலைய கட்டுமான பணிக்கு நடத்தப்பட்ட பூமி பூஜையில் அமைச்சர் நேரு அடிக்கல் நாடடினார்.

அரசு விழாவில் அமைச்சர் நேருவை பார்த்து அர்ச்சகர் ஒருவர் நீங்கள் தான் அடுத்த முதல்வர் என கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பூலோக வைகுண்டம், புண்ணிய நகரம் என அழைக்கப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் ஆகும். ஸ்ரீரங்கத்தில் உள்ள அருள்மிகு ரங்கநாதர் கோவிலில் தற்போது வைகுண்ட ஏகாதசி பெருவிழா நடைபெற்று வருகிறது. ஸ்ரீரங்கம் ஒரு ஆன்மீக தளம் மட்டும் இன்றி சுற்றுலாத்தலமாக உள்ளது. இத்தகைய சிறப்புக்குறிய ஸ்ரீரங்கம் நகரில் இதுவரை தனியாக பஸ் நிலையம் கிடையாது. சாலை ஓரத்தில் நின்றபடி தான் பயணிகளை அரசு போக்குவரத்து கழக பஸ்களும், தனியார் போக்குவரத்து கழக பஸ்களும் ஏற்றி சென்று வருகின்றனர்.

ஸ்ரீரங்கத்தில் தனியாக ஒரு பஸ் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்பது பக்தர்கள் மட்டும் இன்றி ஸ்ரீரங்கத்தில் வசிக்கும் மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும். இந்த கோரிக்கையை ஏற்று ஸ்ரீரங்கத்தில் பஸ் நிலையம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தில் தற்போது பஸ் நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடத்தப்பட்டது .விழாவிற்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார்.

இந்த விழாவில் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். இந்த பூமி பூஜையை நடத்திய அர்ச்சகர் ஒருவர் அமைச்சர் நேருவை பார்த்து நீங்கள் தான் அடுத்த முதல்வர் என கூறினார். அவர் எதற்காக அப்படி கூறினார் என தெரியவில்லை. அவர் கூறியதை கேட்ட அமைச்சர் நேரு அதிர்ச்சி அடைந்தார். இப்படி எல்லாம் பேசக்கூடாது என அவருக்கு எச்சரிக்கை விடுத்தார்.

திருச்சி மாவட்ட தி.மு.க.வில் ஏற்கனவே அமைச்சர் நேரு கோஷ்டி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோஷ்டி என இரு பிரிவாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அமைச்சர் நேருவை பார்த்து அர்ச்சகர் கூறியது அவரை மட்டுமல்ல மாவட்டத்தில் உள்ள தி.மு.க. முன்னணி பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவர் எதற்காக இப்படி பேசினார் என்பது பற்றி உளவுத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த விழாவில் மாநகராட்சி மேயர் அன்பழகன், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உள்பட அதிகாரிகள், பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News