சென்னை ராஜாஜி அரங்கில் விஜயகாந்த் உடல்: அண்ணாமலை வைத்த வேண்டுகோள்

பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வசதியாக சென்னை ராஜாஜி அரங்கில் விஜயகாந்த் உடலை வைக்கவேண்டும் என அண்ணாமலை கோரிக்கை வைத்துள்ளார்.

Update: 2023-12-28 14:30 GMT

மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடலை சென்னை இராஜாஜி அரங்கில் வைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.

மறைந்த தே.மு.தி.க. தலைவர் நடிகர் விஜயகாந்த் உடல் அவரது இல்லத்துக்கு முதலில் கொண்டு செல்லப்பட்டது. அங்கு குடும்ப உறுப்பினர்கள், தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

விஜயகாந்தின் உடல் தற்போது தே.மு.தி.க. தலைமை கழகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு, விஜயகாந்தை கடைசியாக பார்ப்பதற்காக ஏராளமான தொண்டர்களும், பொதுமக்களும் குவிந்துள்ளனர். முக்கிய பிரமுகர்கள் பலரும் சென்று விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விஜயகாந்தின் உடல் நாளை மாலை வரை பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, நாளை மாலை 4.30 மணியளவில் தே.மு.தி.க. அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு தமிழக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும், பிரேமலதா விஜயகாந்துக்கும், எல்.கே.சுதீஷுக்கும் ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:-விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரும் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். எனவே, ராஜாஜி அரங்கில் விஜயகாந்த் உடலை வைத்து, அஞ்சலி செலுத்த அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். விஜயகாந்த் அவர்களுக்கு அரசு இடம் ஒதுக்கி அவருக்கு மணிமண்டபம் கட்ட ஆவன செய்யவேண்டும். அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், இதுதொடர்பாக அறிக்கை விட்டுள்ள அண்ணாமலை, "தமிழகம் முழுவதும் இருந்து வரும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வசதியாக அவரது குடும்பத்தினர் அனுமதி பெற்று, அவரது பூத உடலை ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம். மேலும், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மணிமண்டபம் கட்ட தமிழக அரசு உடனடியாக இடம் ஒதுக்கி, அவருக்கான மரியாதை செலுத்த முன்வர வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை தமிழக பாஜக சார்பில் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

Similar News