பில்கிஸ் பானு வழக்கில் தீர்ப்பு: எடப்பாடி போட்ட போஸ்ட்டால் சர்ச்சை

பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பாக எடப்பாடி போட்ட போஸ்ட் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2024-01-10 11:40 GMT

எடப்பாடி பழனிசாமி.

பில்கிஸ் பானு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பாக  எடப்பாடி பழனிசாமி நேற்று செய்த போஸ்ட் ஒன்று சர்ச்சையை  ஏற்படுத்தி உள்ளது.

அ.தி.மு.க. - பா.ஜ.க. மோதல் காரணமாக அவர்கள் கூட்டணி முறிந்துள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும்  2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமைத்து தனியாக போட்டியிடும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க. கூட்டணியில் இருந்ததால் அ.தி.மு.க. கொள்கைக்கு உடன்படாத சிலவற்றை நிறைவேற்ற வேண்டிய நிலையில் இருந்தோம். கூட்டணி தர்மத்திற்கு உட்பட்டு சி.ஏ.ஏ.வை ஆதரித்தோம். வேறு வழியில்லாமல் சி.ஏ.ஏ.வை ஆதரித்தோம் என எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்துள்ளார். அதேபோல் இஸ்லாமியர்களை கவரும் விதமாக பல விஷயங்களை அவர் பேசி வருகிறார். பாஜகவுடன் இனி கூட்டணியே கிடையாது என்பது போல பேசி வருகிறார்.

பெரும் விவாதம், மோதலுக்கு பின்பே  அதிமுக - பாஜக மோதல் காரணமாக அந்த கூட்டணி முறிந்தது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில், இனிமேல் பாஜகவுடன் கூட்டணி கிடையாது. பாஜக கூட்டணி என்பது இனி நடக்காது. 2024 லோக்சபா தேர்தலில் அவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டோம். அதேபோல் 2026 சட்டசபை தேர்தலிலும் கூட்டணி வைக்க மாட்டோம். எங்கள் கூட்டணி மொத்தமாக முறிந்துவிட்டது.

இந்த கூட்டணியை நாங்கள் முறிக்கவில்லை. எங்கள் தொண்டர்கள்தான் முறித்தனர். இந்த கூட்டணி முறிவதற்கு காரணம் எங்கள் தொண்டர்களின் கோரிக்கைதான். அவர்களின் கோரிக்கையை ஏற்று கூட்டணியை முறித்து உள்ளோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார்.இந்த நிலையில்தான் தற்போது திருச்சி பயணத்திலும் மோடியுடன் எடப்பாடி இல்லை. மோடி தமிழ்நாடு வந்த நிலையில் எடப்பாடி அவரை பார்க்கவில்லை. முன்பு கூட்டணியில் இருந்த மரியாதைக்கு கூட எடப்பாடி பிரதமர் மோடியை நேரில் சென்று பார்க்கவில்லை.

அதேபோல் 2024 நாடாளுமன்ற  தேர்தலில் புதிய கூட்டணி அமைப்போம் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என்று கூறியுள்ளார். அந்த வகையில்தான் புதிய கூட்டணி அமைப்பதற்கான தீவிர ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார். அதன் ஒரு கட்டமாக பல்வேறு முக்கிய தலைவர்களுக்கு போன் செய்து பேசி வருகிறாராம்.இந்த நிலையில்தான் தி.மு.க.வின் இஸ்லாமிய வாக்கு வங்கியை பிரிக்க தீவிரமாக களப்பணிகளை எடப்பாடி செய்து வருகிறார். கிட்டத்தட்ட 14 சதவிகிதம் இருக்கும் சிறுபான்மையினர் வாக்குகளை அவர் குறி வைத்து காய் நகர்த்தி வருகிறார். இதற்காகவே சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநாட்டில் கூட எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். இப்படி தீவிரமாக களப்பணிகளை செய்து வரும் எடப்பாடி பழனிசாமி நேற்று செய்த போஸ்ட் ஒன்று விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் மீண்டும் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்ற எடப்பாடி, 2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த இனக்கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற இசுலாமிய சகோதரி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அவரது குழந்தை உள்பட குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், தண்டிக்கப்பட்ட 11 குற்றவாளிகளை முன்கூட்டியே குஜராத் அரசு விடுவித்ததை எதிர்த்து, பாதிக்கப்பட்ட சகோதரி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அந்த விடுதலையை ரத்து செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வரவேற்கிறது என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் அந்த பதிவில் எடப்பாடி பழனிசாமி குற்றவாளிகளை விடுதலை செய்த பாஜக அரசை பற்றி ஒரு வாரத்தை கூட கூறவில்லை. ஆனால் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்ட போஸ்டில், சகோதரி பில்கிஸ் பானு வழக்கில் இறுதியில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது. இருள் சூழ்ந்த வேளையில் நம்பிக்கை தரும் ஒளிக்கீற்றாக உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது. குஜராத் மாநில பா.ஜ.க. அரசு, உண்மைகளை மறைத்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்திருக்கிறது என்று உச்சநீதிமன்றம் இடித்துரைத்திருப்பது, அரசியல் இலாபங்களுக்காக நீதி வளைக்கப்பட்டதை வெளிச்சம் போட்டுக் காட்டி உள்ளனர் என்று பாஜக அரசின் பெயரை குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில்தான் போஸ்டில் கூட பா.ஜ.க.வை எதிர்க்காத எடப்பாடி பழனிசாமி  எப்படி இஸ்லாமியர்களை உண்மையாக ஆதரிப்பார் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி போஸ்ட் செய்து வருகின்றனர்.

அதேபோல், இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக செயல்படுவது போல பேசும் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை ஏன் கேள்வி கேட்க மறுக்கிறார். ஆளுநர் இஸ்லாமியர்களை விடுதலை செய்ய கையெழுத்து போடவில்லை. அதை ஏன் இவர் கேட்கவில்லை. சி.ஏ.ஏ.விற்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டு வந்தார்கள். அதற்கு கூட எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவிக்கவில்லையே. இப்போது கூட அவர் மோடியை எதிர்க்கவில்லையே. மோடி பெயரை சொல்லவில்லையே. ஏன்? தி.மு.க.வினருக்கு எதிராக இஸ்லாமியர்கள் திரும்பி சிறுபான்மையினர் வாக்குகள் சென்றுவிடும் என்றும் சொல்ல முடியாது.

இஸ்லாமியர்களை விடுதலை செய்ய ஏற்கனவே அரசு பரிந்துரை செய்துவிட்டது என்று ஸ்டாலின் கூறியுள்ளார். ஆளுநர்தான் இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று ஸ்டாலின் கூறி இருக்கிறார். அப்படி இருக்க எடப்பாடி இதில் ஸ்டாலினை எப்படி எதிர்க்க முடியும். அவர் ஆளுநரைத்தானே எதிர்க்க முடியும்? அவர் ஆளுநரிடம்தானே கேட்க முடியும். ஆனால் அங்கே கேட்கவில்லையே. இஸ்ரேல் - பாலஸ்தீனம் போருக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி எதுவும் சொல்லவில்லையே, என்றும் அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News