‘தமிழகத்தில் பெரியார் சிலை அவமதிப்பவர் கை இருக்காது’ -வைகோ எச்சரிக்கை

‘தமிழகத்தில் பெரியார் சிலை அவமதிப்பவர் கை இருக்காது’ என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-12-24 10:48 GMT
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ.

தந்தை பெரியாரின் 50வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதையொட்டி மதுரையில் உள்ள பெரியார் சிலைக்கு ம.தி.மு.க .பொதுச்செயலாளர் வைகோ மற்றும் ம.தி.மு.க முதன்மை  செயலாளர் துரை வைகோ உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ கூறியதாவது:- இன்றைக்கு இந்திய உபகண்டம் முழுவதும் சமூக நீதியின் குரல் கேட்கிறது என்றால் அதற்குக் காரணம் ஈரோட்டுப் பெரியார். அவரால் தான் சமூக நீதி தழைத்தோங்குகிறது. தந்தை பெரியாரை இன்றைக்கு இளைஞர்கள் அதிகளவில் பின்பற்ற ஆரம்பித்துவிட்டனர்.

தந்தை பெரியார் சிலையை திட்டமிட்டு ஒரு கூட்டம் அவமதிப்பு செய்கிறது. அதற்கு எல்லா இடங்களிலும் தகுந்த பதிலடியை நாங்கள் கொடுத்துள்ளோம். வெளிப்படையாக பெரியார் சிலைக்கு செருப்பு மாலை போடுவோம், அவமதிப்பு செய்வோம் என யாராவது ஒருவர் கூறினால் அவர்கள் கை இருக்காது என்று நான் ஏற்கனவே  கூறி இருக்கிறேன். 

2015ல் சென்னையில் வெள்ளம் தாக்கியபோது அரசு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்காததால் பெரும் உயிர்சேதங்கள் ஏற்பட்டன. ஆனால், இந்த முறை கனமழை பெய்தபோது முதல்வர் ஸ்டாலின் முன்கூட்டியே எடுத்த நடவடிக்கைகளின் விளைவாக பெரிய சேதம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து, தென் மாவட்டங்களில் தாக்கிய வெள்ளத்தால், மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை சரிசெய்வதற்கு மாநில அரசு தங்கள் சக்தியை எல்லாம் பயன்படுத்தியது. மாநில அரசு கோரிய நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தேவைக்கு அதிகமாக நிதி தருகிறார்கள். ஒரு கண்ணிலே வெண்ணெய். பா.ஜ.க .ஆளாத மாநிலங்களின் கண்களில் சுண்ணாம்பை வைக்கிறார்கள். பிரதமர் மோடியை போகிறபோக்கில் முதல்வர் ஸ்டாலின் பார்த்ததாக சொல்கிறார். அவர் என்ன வழிப்போக்கரா? போகிற போக்கில் பார்ப்பதற்கு? மத்திய அமைச்சர்கள் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை பார்வையிட வரவில்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியதை தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தென்மாவட்டங்களில் ஆய்வு செய்ய வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News