திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு குறி வைக்கும் ம.தி.மு.க.வின் துரை வைகோ

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு ம.தி.மு.க.வின் துரை வைகோ குறி வைத்து காய்களை நகர்த்தி வருகிறார்.

Update: 2023-12-19 16:27 GMT

ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ.

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி பாராளுமன்ற தொகுதியை ம.தி.மு.க.வின் துரை வைகோ கூறி வைத்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாத காலமே உள்ளன. இப்பொழுதே இந்தியா முழுவதும் அனைத்து அரசியல் கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க தொடங்கிவிட்டன. அதன் ஒரு பகுதியாக தான் இந்தியா கூட்டணி சார்பில் இன்று டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடந்து முடிந்துள்ளது.

இது ஒரு புறம் இருக்க தமிழகத்திலும் ஆளுங்கட்சியான தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள முழு அளவில் தன்னை தயார்படுத்தி கொண்டு வருகிறது. தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ம.தி.மு.க. கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், த.மு.மு.க. ஆகிய கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்கலாம் என்பது கூட முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

40 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றால் தான் யார் பிரதமர் என்பதை நாம் முடிவு செய்ய முடியும். ஆதலால் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.  தி.மு.க. வெற்றி வாகை சூடும் என எதிர்பார்க்கப்படும் தொகுதிகளை தி.மு.க. வேட்பாளர்கள் நிறுத்தப்பட இருக்கிறார்கள். கூட்டணி கட்சிகளுக்கு அவர்கள் வெற்றி பெற தகுதியான தொகுதிகள் ஒதுக்கப்படும் என தெரிகிறது.

தி.மு.க. கூட்டணியில் பெரிய கட்சியான காங்கிரசுக்கு இந்த முறை சிங்கிள் டிஜிட்டில் தான் தொகுதி ஒதுக்கப்படும் என கூறப்பட்டு வருகிறது. காங்கிரசிற்க சிங்கள் டிஜிட் என்றால் கம்யூனிஸ்ட், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், த.மு.மு.க. ம.தி.மு.க. போன்ற கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகள் தான் ஒதுக்கப்படும் என்றே கூறப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் உள்ள முக்கியமான தொகுதிகளில் தமிழகத்தின் மையப் பகுதியில் உள்ள திருச்சி நாடாளுமன்ற தொகுதியும் ஒன்றாகும். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில்  ஏற்கனவே டாக்டர் மதுரம், கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் கல்யாணசுந்தரம் போன்ற பெருந்தலைகள் எம்பியாக இருந்து பணியாற்றி உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் அடைக்கலராஜ் 3 முறை எம்பியாக இருந்துள்ளார். பா.ஜகவின் அரங்கராஜன் ரங்கராஜனும் இந்த தொகுதியின் எம்பியாக அமைச்சராக இருந்து மக்கள் பாராட்டும் வகையில் பணியாற்றி உள்ளார்.

மேலும் திருச்சி பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை ஐம்பதாண்டு கால திராவிட கட்சிகளின் எம்.பி.க்கள் இருந்ததை விட கூட்டணி காங்கிரஸ் போன்ற கூட்டணி கட்சி உறுப்பினர்களே அதிக அளவில் எம்.பி.யாக இருந்து பணியாற்றி உள்ளனர்.

அந்த வகையில் தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருநாவுக்கரசர் திருச்சி தொகுதியின்  எம்.பி. ஆகஉள்ளார். அவருக்கு இம்முறை காங்கிரஸ் கட்சியில் சீட் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாக இருந்தாலும் திருச்சி நாடாளுமன்ற தொகுதி நிச்சயமாக காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படாது என்றே கூறப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. போட்டியிடுவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ள ஒரு சூழலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக். த.மு.மு.க .ஆகிய கட்சிகள் குறி வைத்துள்ளன.

ஆனால் அவை எல்லாவற்றிற்கும் மேலாக தற்போது ம.தி.மு.க.வும் திருச்சி நாடாளுமன்ற தொகுதி மீது ஒரு கண் வைத்து இருக்கிறது. ஏனென்றால் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் ஏற்கனவே தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வை சேர்ந்த எல். கணேசன் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். அந்த வகையில் இப்பொழுதும் அதனை ம.தி.மு.க.விற்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ம.தி.மு.க. விற்கு திருச்சி நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டால் ம.தி.மு.க. வேட்பாளராக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் மகனும் ம.தி.மு.க. முதன்மைச் செயலாளருமான துரை வைகோ போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு சீட் வழங்கப்படவில்லை என்றால் கட்சியின் துணை பொது செயலாளராக உள்ள டாக்டர் ரொகையாவிற்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது. ரொகையாஏற்கனவே திருச்சி மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை நிரூபிக்கும் வகையில் ம.தி.மு.க.வின் நாடாளுமன்ற தேர்தல் குறித்த கலந்தாய்வு கூட்டம் திருச்சி அருண் ஹோட்டலில் வருகிற 25ஆம் தேதி திங்கட்கிழமை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான டாக்டர் ரொகையா தலைமை தாங்குகிறார். திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு முன்னிலை வகிக்கிறார். புறநகர் மாவட்ட செயலாளர் டி.டி.சி. சேரன் வரவேற்று பேசுகிறார். புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.

இந்த கூட்டத்தில் ம.தி.மு.க.வின் முதன்மை செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் நாடாளுமன்ற தேர்தல் குறித்து முக்கியமான கலந்துரையாடல் செய்கிறார். கூட்டத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளர்  இரா, முருகன், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா, மூத்த நிர்வாகி புலவர் முருகேசன் உள்பட அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டம் மிக ஒரு முக்கியமான கூட்டமாக ம.தி.மு.க. தரப்பில் பேசப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News