ஆந்திர அரசியலில் குதித்த இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்

ஆந்திர அரசியலில் குதித்து உள்ளார் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு.

Update: 2023-12-28 14:50 GMT
கட்சியில் சேர்ந்த முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடுவிற்கு துண்டு அணிவித்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்  ரெட்டி.

இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்  கட்சியில் இணைந்துள்ளார்.

2010 முதல் 2017 வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் அங்கம் வகித்த அம்பத்தி ராயுடு 2018 முதல் நடந்து முடிந்த ஐபிஎல் சீசன் வரை சிஎஸ்கே அணியின் முக்கிய பிளேயராக வலம் வந்தார். அணி இக்கட்டான சூழலில் தவிக்கும்போது அம்பத்தி ராயுடு தனது சிறப்பான பேட்டிங் திறமையால் தான் விளையாடிய அணிகளுக்கு வெற்றியை பெற்று கொடுத்துள்ளார்.

ஐ.பி.எல்.லில் மும்பை இந்தியன்ஸ், சி.எஸ்.கே. அணிகளின் வெற்றிக்கு இவரது பங்கு என்பது முக்கியமானதாகும். இந்நிலையில் தான் கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சி.எஸ்.கே. அணிக்காக அம்பத்தி ராயுடு விளையாடினார். அதில் சி.எஸ்.கே. சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில் அவர் ஓய்வை அறிவித்தார். இதன்மூலம் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்தும் அவர் விடைபெற்றார்.

இதையடுத்து அம்பத்தி ராயுடு விரைவில் அரசியல் கட்சியில் இணையலாம் என்ற பேச்சுக்கள் அடிப்பட்டன. அம்பத்தி ராயுடு ஆந்திராவை சேர்ந்தவர் என்பதால் அவர் அங்கு ஆட்சி செய்யும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணையலாம் என்ற தகவல்கள் வெளியாகி வந்தன.

அதன்படியே அம்பத்தி ராயுடு இன்று அரசியல் பிரவேசம் செய்தார். அவர் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். விஜயவாடாவில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில் அவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அப்போது ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, துணை முதல்வர் நாராயண சாமி, எம்பி பத்திரெட்டி மிதுன் ரெட்டி உள்ளிட்டவர்கள் அவருக்கு சால்வை மற்றும் கட்சியின் துண்டு போர்த்தி வரவேற்றனர்

இது தொடர்பாக ஒய்.எஸ்.ஆர். காங்கரிஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு, முதல்வர் ஜெகன்மோகன் முன்னிலையில் முகாம் அலுவலகத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். துணை முதல்வர் நாராயண சாமி, எம்.பி. பத்திரெட்டி மிதுன் ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பத்தி ராயுடு தற்போது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள நிலையில் அவர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அம்பத்தி ராயுடு ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் தான் மசூலிப்பட்டிணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற தகவலும் பரவுகிறது. இருப்பினும் இது சாத்தியமா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Tags:    

Similar News