எனக்கு உடல் நலமில்லையா? சென்னை விழாவில் முதல்வர் ஸ்டாலின் உருக்கமான பேச்சு

எனக்கு உடல் நலமில்லையா? மகிழ்ச்சியாக இருக்கிறேன் என சென்னை விழாவில் முதல்வர் ஸ்டாலின் உருக்கமான பேசினார்.

Update: 2024-01-12 13:03 GMT

சென்னையில் நடைபெற்ற அயலக தமிழர் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று சான்றிதழ்கள் வழங்கினார்.

தனக்கு எப்போதும் மக்களைப் பற்றிதான் நினைப்பே தவிர, தன்னைப் பற்றி இருந்தது இல்லை என்றும் சக்தியை மீறி உழைத்து வருகிறேன் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் உருக்கமுடன் பேசியிருக்கிறார்.

சென்னையில் இன்று  அயலகத் தமிழர் தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர்  பேசும் போது  கூறியதாவது:-

''எல்லோரும் நன்றாக இருக்கிறீர்களா? மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? ஒவ்வொரு முறையும் நான் வெளிநாடுகளுக்கு வருகின்றபோது நீங்கள் எப்படி மிக பிரமாண்டமாக வரவேற்பு கொடுப்பீர்களோ... அதேமாதிரி, ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், மூன்றாவது முறையாக இந்த அயலகத் தமிழர் நாளில் உங்கள் தாய் மண்ணுக்கு வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி. எனக்கு உடல் நலமில்லை…உற்சாகமாக இல்லை… என்று நேற்று ஒரு பத்திரிகையில் எழுதி இருந்தார்கள். அதை படித்தபோது எனக்கு சிரிப்புதான் வந்தது.

எனக்கு என்ன குறை? தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் மகிழ்ச்சியாக இருக்கின்றபோது, அதைவிட எனக்கு வேறு என்ன வேண்டும்? எனக்கு மக்களைப் பற்றிதான் எப்போதும் நினைப்பே தவிர, என்னைப் பற்றி இருந்தது இல்லை. எந்த சூழலிலும், மக்களோடு இருப்பவன் நான். என் சக்தியை மீறியும் உழைப்பவன் நான். இதுமாதிரியான செய்திகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, உழைத்துக் கொண்டே இருப்பேன். இந்த மாநாட்டுக்கு கிடைத்த மாபெரும் சிறப்புகளில் ஒன்று சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் சண்முகம் அவர்கள் இங்கு வருகை தந்திருப்பது.

அவர், உலகப் புகழ்பெற்ற தமிழன் மட்டுமல்ல, உலகமே கவனிக்கின்ற பதவியில் இருக்கும் தமிழன்.நான் சிங்கப்பூர் சென்றிருந்த போது நான் தங்கி இருந்த  இடத்திற்கே வந்து, எனக்கு சிறப்பு செய்தார். நேற்று அவரை என்னுடைய வீட்டிற்கே வரவழைத்து மகிழ்ந்தேன். அவரை இன்றும், என்றும் வாழ்த்தி வரவேற்கிறேன். நம்முடைய தேர்தல் அறிக்கையில் சொன்னபடியே, அயலகத் தமிழர் நலனுக்கென்று தனியாக ஒரு துறையை உருவாக்கி, தனி அமைச்சரையும் நியமித்து, உங்களுடைய அவசரத் தேவைகள் உடனுக்குடன் சிறப்பான முறையில் தீர்த்து வைக்கப்பட்டு வருகிறது. ஒரு தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களைக் கொண்ட அயலகத் தமிழர் நல வாரியம் அமைக்கப்பட்டிருக்கிறது.

வெளிநாடுகளில், கைது செய்யப்படுகின்ற சூழலுக்கு ஆளாகின்ற தமிழர்களுக்கு உரிய சட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அயல்நாடுகளில் உதவி தேவைப்படுகின்ற தமிழர்களுக்கு ஒன்றிய அரசின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் தொடர்புடைய இந்தியத் தூதரகத்துடன் இணைந்து உரிய நிவாரண நடவடிக்கைகளை இந்தத் துறை சிறப்பாக செய்து வருகிறது.

மருத்துவ இயலாமை மற்றும் பல்வேறு காரணங்களால் தாயகம் திரும்ப முடியாமல் கஷ்டப்படுகின்ற தமிழர்களை தாய்நாட்டிற்கு அழைத்துக் கொண்டு வரவும், அங்கு இறக்க நேரிடும் தமிழர்களின் உடல்களை இந்தியா கொண்டு வரவும், தமிழ்நாடு அரசால் 1 கோடி ரூபாய் சுழல்நிதி ஏற்படுத்தப்பட்டு, தமிழர்களுடைய துயரங்களை துடைக்கின்ற பணி உரிய முறையில் செய்யப்பட்டு வருகிறது. உக்ரைன், சூடான், கம்போடியா, தாய்லாந்து, மியான்மர் என்று பல்வேறு நாடுகளில் இருக்கின்ற நம்முடைய தமிழர்கள் அங்கு எதிர்பாராத விதமாக பிரச்சினைகளை சந்திக்கின்றபோது, தமிழ்நாடு அரசு விரைவாக செயல்பட்டு பத்திரமாக அழைத்துக்கொண்டு வந்திருக்கிறது.

இவ்வாறு முதல்  அமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

Tags:    

Similar News