தீபாவளி ஃபண்ட் சேமிப்புத்திட்டம்..! உஷாரா இருக்கனும்ங்க..!
Diwali Fund Scheme-சாதாரண மக்களை கவரும் தீபாவளி சேமிப்புத்திட்டங்களில் சேர்வதற்கு முன்னர் பொதுமக்கள் கவனமாக இருப்பது அவசியம்.;
Diwali Fund Scheme-தீபாவளின்னா குதூகலம்,மகிழ்ச்சி எல்லாமே மனதுக்குள் வந்து சேரும். புது டிரஸ்,பட்டாசுன்னு சும்மா பட்டாசு கிளப்பும். அது கூடவே ஸ்வீட்,காரம் என மண..மணக்கும்.மனசும் நிறைவாகும். அரசு மற்றும் தனியார் நிறுவன பணியாளர்களுக்கு போனஸ் வந்து சேரும். கை நிறைய, மனசு நிறைய சந்தோஷங்களுடன் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வந்து சேரும்.
சாதாரண மக்களின் ஃபண்ட் சேமிப்பு
ஆனால், சாமான்ய மக்களுக்கு இதுவெல்லாம் சாத்தியம் இல்லை. அன்றாடம் வேலை செய்தால் மட்டுமே பணத்தேவை பூர்த்தியாகும். அதனால், இந்த சாமான்ய மக்களின் ஆபத்பாந்தவனாக இருப்பது தீபாவளி ஃபண்ட் சேமிப்புத்திட்டம்.
ஆமாம், ஒரு தனி மனிதராகவோ அல்லது குழுவாக சேர்ந்தோ தீபாவளி ஃபண்ட் வாங்குவார்கள். இது ஒரு சேமிப்பு முறைதான் என்றாலும் கூட சாதாரண மக்கள் தீபாவளி போன்ற பெரிய செலவுகளை சமாளிக்க பல சிரமங்களை எதிர்கொள்வார்கள். அதனால், வாராவாரம் அல்லது மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை சிறு சேமிப்பு போல வசூல் செய்வார்கள். ஒரு வருட முடிவில் அது பெரிய தொகையாக கிடைக்கும். பணமாகவோ அல்லது இனிப்பு,காரம், பட்டாசு போன்றவைகள் வாங்குவதற்கு இது பயன்படும். பணம் வசூல் செய்பவர்கள் தொகையைப்பொறுத்து என்னென்ன வழங்கப்படும் என்பதை நோட்டீஸாக வழங்குவார்கள்.
அதில் குறிப்பிட்டுள்ளபடி அனைவருக்கும் பொருட்கள் வழங்கப்படும். இவ்வாறு வசூலிக்கப்படும் தொகையை வசூலிப்பவர் வேறு முதலீட்டில் போட்டு வைப்பார். அதில் அவருக்கும் லாபம் கிடைக்கும்.
தீபாவளி ஆஃபர்
சிலர், இதில் சிறப்பு பரிசுகளும் வழங்குவார்கள். மொத்தமாக வீட்டுக்கு இனிப்பு, கார வகைகள், பட்டாசுகள், வீட்டுக்கு மட்டன்,சிக்கன்,அதற்கு தேவையான மசாலா பொருட்கள் என்று எல்லாமே வழங்குவார்கள். சில அமைப்புகள் பணமாக திருப்பித் தருவதும் உண்டு. அந்த பணம் சாதாரண மக்களுக்கு தீபாவளிக்கு ஆடைகள் வாங்குவதற்கு பயன்படும்.
ஃபண்ட் திட்ட வகைகள்
- பலகாரச் சீட்டு
- மளிகை சேமிப்பு சீட்டு
- தீபாவளி சீட்டுத்திட்டம் (சீட்டுப் பணமாக தருவது)
- நகை சேமிப்புத் திட்டம்
- பட்டாசு சேமிப்புத் திட்டம்
- பாத்திர சேமிப்புத் திட்டம்
- வீட்டு உபயோகப் பொருட்கள் சேமிப்புத் திட்டம் என பல திட்டங்கள் உள்ளன.
பெரிய நிறுவனங்கள் மற்றும் வங்கிகள்
இப்படி பல சேமிப்புத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் இதற்கு பெரிய நிறுவனங்களும் விதிவிலக்கல்ல. இதை குறிப்பாக பெரிய நிறுவனங்கள் முதல் வங்கிகள் வரை பண்டிகை காலங்களில் வியாபார நுணுக்கங்களில் இறங்கி வணிக நடவடிக்கையை பெருக்கிக்கொள்கின்றனர். பெரிய நகைக்கடைகள் கூட நகை சேமிப்புத் திட்டங்களை அறிவிக்கின்றனர். (தற்போது தடைவிதிக்கப்பட்டுள்ளது). மேலும் வங்கிகள் தீபாவளிக்கு வாகனக்கடன், வீட்டுக்கடன்களுக்கு வட்டி சலுகை மற்றும் சேமிப்புத்திட்டங்களுக்கு கூடுதல் வட்டி அறிவிப்பு என்று அவர்களும் கவர்ச்சியான அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். மேலும் வாகன விற்பனை நிறுவனங்களும், பெரிய துணிக்கடைகளும் கூட தீபாவளி சலுகைகளை அறிவிப்பது சாதாரணமாக நடந்து வருகிறது.
இப்படி பண்டிகை காலங்கள் என்பது பொருளாதார அடிப்படையில் கோடிக்கணக்கான ரூபாய் சந்தை மதிப்பீட்டை உருவாக்கும் களமாக விளங்குகிறது.
விபரீதங்கள்
பெரிய நிறுவனங்கள், வங்கிகள் போன்றவை பொதுமக்களுக்கு எந்த தீய விளைவுகளையும் ஏற்படுத்தமாட்டார்கள். அதை சாதாரண மக்களும் அறிவார்கள். ஆனால், சிறிய அளவில் ஃபண்ட் வசூல் செய்பவர்கள் நமக்கு நன்றாக தெரிந்தவர்களாக இருப்பது நல்லது. ஏனெனில் தீபாவளி பண்டிகையைப் பயன்படுத்தி சில ஏமாற்று பேர்வழிகள் பணத்தை வசூல் செய்வார்கள். அதிக பயன் கிடைக்கும் வகையிலான ஆசைவார்த்தைகளை அள்ளி வீசுவார்கள்.
எங்கள் சேமிப்பு ஃபண்ட் திட்டத்தில் சேர்பவர்களுக்கு பைக், வீட்டு உபயோக பொருட்கள் குளுக்கல் முறையில் வழங்கப்படும். உறுப்பினர் அனைவருக்கும் நிச்சயம் ஒரு பரிசு உண்டு என்றெல்லாம் சீன் போடுவார்கள். குளுக்கல் தேதியை தீபாவளிக்கு முன்னதாகவே அறிவித்து விடுவார்கள். குளுக்கல் நாளன்றே அனைவருக்கும் லிஸ்டில் கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் வழங்கப்படும் என்றும் அறிவிப்பார்கள்.
அறிவித்த தேதியில் பரிசுகளும் ஸ்வீட்,காரம் மற்றும் பட்டாசு என எல்லாவற்றையும் வாங்குவதற்கு ஆவலாக நாம் அவர்கள் இருந்த அலுவலகம் சென்றால், அங்கு அவர்கள் இருக்கமாட்டார்கள். ஆமாம், முதல்நாள் இரவே பணத்தை சுருட்டிக்கொண்டு கம்பி நீட்டி இருப்பார்கள். நாம் போலீசுக்கு புகார் கொடுத்துவிட்டு பணத்தைக்கட்டி ஏமாந்து இருப்போம். கோடிக்கணக்கான பணத்துடன் 'சொர்க்கமே என்றாலும் அது நம்மூருதான்' என்று பாட்டுப்பாடி ஜாலியாக இருப்பார்கள், கொள்ளையடித்தவர்கள்.
இப்படியானவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால் சாதாரண மக்கள் நாம்தான் உஷாராக இருக்கவேண்டும். உள்ளூர்க்காரர்கள், நமக்கு நன்றாக தெரிந்தவர்கள், நம்பிக்கைக்கு உரியவர்கள் என்றால் மட்டுமே பணத்தை செலுத்தவேண்டும்.
நல்லவர்களும் இருப்பார்கள். அதேநேரம் சாதாரண மக்களின் வயிற்றில் அடித்து பணம் கொள்ளையடிக்கும் மோசமானவர்களும் எம்மோடு உள்ளார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. வெற்று வார்த்தை ஜாலங்களில் மயங்கி நாம் ஏமாறாமல் இருக்கவேண்டும்.
கலர்ஃபுல் விளம்பரங்கள்
கலர்ஃபுல் விளம்பரங்களைக் கண்டு ஏமாறாதீர்கள். எதையும் செய்ய நினைப்பவர்கள் மட்டுமே ஆசை வார்த்தைகளை தெளிப்பார்கள். உண்மையானவர்கள் செய்ய முடிந்ததை மட்டும் சொல்லுவார்கள். கார் தீருவோம், பைக் தீருவோம், வீட்டுபயோக பாத்திரங்கள் தருவோம் என்பதெல்லாம் நடைமுறைக்கு ஏற்புடையதல்ல என்று நீங்கள் உணரவேண்டும். ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தானே செய்வார்கள். நாம் விழித்துக்கொண்டால், வீணர்கள் வீழ்ந்துபோவார்கள்.
அதனாலங்க..தீபாவளி சேமிப்பு ஃபண்ட்..ஃபண்ட்...ஃபண்ட்ன்னு யாராவது வந்து கேட்டால், மேலேயும்,கீழேயும் ஒருமுறை பார்த்து போய்வாருங்கள்..என்று கும்பிட்டு விடைகொடுங்கள். அதைபோன்றவர்களிடம் தீபாவளி ஃபண்ட். சேர்ப்பதற்கு பதில் அதே தொகையை பேங்கில் போடுங்க. வருஷ முடிவில் உங்க பணம் உங்கள் கையில். தீபாவளிக்கு தேவையானதை வாங்கிட்டு போறோம். எப்டீங்க நான் சொல்றது..?
காவல்துறையினரும் இதற்கு விழிப்புணர்வு அளித்து வந்தாலும் கூட மக்கள் ஏமாந்து நிற்கும் அவலம் தொடர்கதையாகவே உள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2