குஜராத்தில் பிரதமர் மோடி திறந்த உலகின் நவீன மயமான வைரச்சந்தை

குஜராத்தில் பிரதமர் மோடி உலகின் நவீன மயமான வைரச்சந்தையை இன்று திறந்து வைத்தார்.

Update: 2023-12-17 14:21 GMT

குஜராத் மாநிலம் சூரத்தில் உலகின் மிக நவீனமயமான வைர சந்தையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

பிரதமர் மோடி இன்று குஜராத் மாநிலம் சூரத் பயணம் மேற்கொண்டு சூரத் விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இந்த முனையக் கட்டிடம் 1200 உள்நாட்டு பயணிகளையும் 600 சர்வதேச பயணிகளையும் ஒரே நேரத்தில் கையாளும் திறன் கொண்டது. இது மேலும் 3000 பயணிகளைக் கையாளும் திறன் கொண்ட வகையிலும், வருடாந்திர பயணிகள் கையாளும் திறனை 55 லட்சமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த முனைய கட்டிடம், சூரத் நகரத்தின் நுழைவாயிலாக இருப்பதால், அதன் உள்ளூர் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் சாராம்சம் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் பிரதிபலிக்கும் வகையில் பார்வையாளர்களுக்கு ஒரு சிறந்த உணர்வை உருவாக்குகிறது. மேம்படுத்தப்பட்ட முனைய கட்டிடத்தின் முகப்பு சூரத் நகரத்தின் 'ராண்டர்' பிராந்தியத்தின் பழைய வீடுகளின் வளமான மற்றும் பாரம்பரிய மரவேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது. இது பயணிகளின் அனுபவத்தை வளப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டடத்தில் இரட்டை இன்சுலேட்டட் கூரை அமைப்பு, எரிசக்தி சேமிப்பிற்கான அமைப்புகள், குறைந்த வெப்ப அலகு, மழை நீர் சேகரிப்பு அமைப்பு, நீர் சுத்திகரிப்பு நிலையம், கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பு மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட நீரை நிலச் சீரமைப்பு மற்றும் சூரிய மின் உற்பத்தி நிலையத்திற்கு பயன்படுத்துதல் போன்ற பல்வேறு நிலைத்தன்மை அம்சங்கள் உள்ளன.

சூரத் டைமண்ட் போர்ஸ் எனப்படும் சூரத் வைரச் சந்தையையும் பிரதமர் திறந்து வைத்தார். இது சர்வதேச வைரம் மற்றும் நகை வணிகத்திற்கான உலகின் மிகப்பெரிய மற்றும் நவீன மையமாக இருக்கும். கடினமான மற்றும் மெருகூட்டப்பட்ட வைரங்கள் மற்றும் நகைகள் இரண்டையும் வர்த்தகம் செய்வதற்கான உலகளாவிய மையமாக இது இருக்கும். இறக்குமதி - ஏற்றுமதிக்கான அதிநவீன 'சுங்க அனுமதி மாளிகை'யை இது கொண்டிருக்கும்; சில்லறை நகை வணிகத்திற்கான நகை வணிக வளாகம் மற்றும் சர்வதேச வங்கி மற்றும் பாதுகாப்புப் பெட்டகங்களின் வசதி இதில் உள்ளன.

Tags:    

Similar News