திருப்பதி லட்டு சர்ச்சையில் ஆந்திர முதலமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்..!

லட்டு சர்ச்சையில் முழுமையான முடிவு வரும்வரை பொறுமை காக்காமல் பிரச்னையை வெளியே விட்டது ஏன் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.;

Update: 2024-09-30 13:26 GMT

திருப்பதி லட்டு (கோப்பு படம்)

கடவுள் சார்ந்த விவகாரங்களில் அரசியலை புகுத்தக்கூடாது. அரசியலை தள்ளி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், எந்த ஆதாரமும் கிடைக்காமல் திருப்பதி லட்டு குறித்து சந்திரபாபு நாயுடு பொதுவெளியில் புகார் கூறியது தேவையில்லாததாகும் என்று கருத்து தெரிவித்துள்ளது.

திருப்பதி லட்டு தயாரிக்கப்படும் நெய்யில் விலங்கின் கொழுப்பு கண்டறியப்பட்ட சர்ச்சை தொடர்பாக, சுப்பிரமணியன் சாமி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட புகாரை, உயர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் பொதுவெளியில் கூறுவது மத நல்லிணக்கத்தை கெடுக்கும் செயல் என்று சுப்பிரமணியன் சாமி குற்றம் சாட்டினார். அதற்கு, எதிர்ப்பு தெரிவித்த ஆந்திர பிரதேச அரசு, திருப்பதி தேவஸ்தானம் சார்பாக சுப்பிரமணியன் சாமி எப்படி மனு தாக்கல் செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பியது. 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கடவுள் சார்ந்த விவகாரங்களில் அரசியலை தள்ளி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். மேலும், கலப்பட நெய் தான் பிரசாதத்திற்கு பயன்படுத்தப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டதா? என்று கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், சிறப்பு விசாரணைக் குழுவின் முடிவு வரும் வரை பொறுமை காத்திருக்காமல் அவசரமாக பொதுவெளியில், ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கருத்து தெரிவித்தது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

லட்டில் கலக்கப்பட்டது சோயா பீன்ஸ் அல்லது தேங்காய் எண்ணெயாகக் கூட இருக்கலாம் என்று அறிக்கையில் கூறும் நிலையில், அது மீன் எண்ணெய் என்ற முடிவுக்கு நாம் வர முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதையடுத்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிற்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், இவ்வழக்கு விசாரணையை அக்டோபர் 3 ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Tags:    

Similar News