இந்தியாவிற்கு பல சாதனைகள் மற்றும் சில வேதனைகள் தந்த 2023ம் ஆண்டு

இந்தியாவிற்கு பல சாதனைகள் மற்றும் சில வேதனைகள் தந்த ஆண்டாக 2023ம் ஆண்டு முடிந்துள்ளது.

Update: 2023-12-31 15:11 GMT

2023ம் ஆண்டு இந்திய நாடு பல சாதனைகளையும் சில சோதனைகளையும் சந்தித்து உள்ளது. அது என்னென்ன என்பதை இனி பார்க்கலாம்.

ஜி20 மாநாடு: இந்தாண்டு தான் இந்தியா ஜி20 அமைப்பிற்குத் தலைமை தாங்கியது. இது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. கடந்த செப்டம்பர் 9, 10 தேதிகளில் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற்றது. இந்தியா ஜி20 உச்சி மாநாட்டை நடத்திய நேர்த்தியை பார்த்து ஒட்டுமொத்த உலக நாடுகளும் வியந்தது. முக்கியத் தலைவர்களான சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் இதில் கலந்து கொள்ளவில்லை என்ற போதிலும் இதை வெற்றிகரமாக நடத்திக் காட்டியது.

கருத்து வேறுபாடுகளைத் தாண்டி டெல்லி பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது முழுக்க முழுக்க இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றிகரமாகவே பார்க்கப்படுகிறது. அதேபோல ஜி20 மாநாட்டில் முதல்முறையாக ஆப்பிரிக்க ஒன்றியம் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. இந்த உச்சி மாநாட்டிற்குப் பிறகு இந்தியா கனடா மோதலும் வெடித்தது குறிப்பிடத்தக்கது

ஆஸ்கர் விருது: சர்வதேச உறவுகள் மட்டுமின்றி கலைத் துறையிலும் இந்தியா மாபெரும் சாதனையைப் படைத்தது. இந்தாண்டு இந்திய சினிமாவிற்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆண்டாக இருந்தது. ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் நாட்டு நாட்டுப் பாடலுக்காக ஆஸ்கார் விருதை வென்றது. கடந்த 2009இல் ஜெய் ஹோ படலுக்கு பிறகு நாட்டு நாட்டுப் பாடல் ஆஸ்கர் விருதைப் பெற்றுள்ளது. பிரபல இசையமைப்பாளர் கீரவாணி இசையில் உருவான இந்த பாடலுக்கு கோல்டன் குளோப் விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

சந்திரயான் 3. அமெரிக்கா, ரஷ்யா, சீனா நாடுகளுக்கு அடுத்து நிலவில் சாட்டிலைட்டை வெற்றிகரமாகத் தரையிறக்கிய நாடு என்ற சிறப்பை இந்தியா பெற்றது. மேலும், நிலவின் தென் துருவத்தில் முதலில் தரையிறங்கிய சாட்டிலைட் என்ற சிறப்பையும் சந்திரயான் 3 பெற்றது. கடந்த ஆக. 23ஆம் தேதி சந்திரயான் 3 வெற்றிகரமாகத் தரையிறங்கியது. மணிப்பூர் கலவரம்: நமது நாட்டின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இதுவரை இல்லாத வகையில் மிக மோசமான இன கலவரம் ஏற்பட்டது. கடந்த மே மாதம் தொடங்கிய இந்த இன கலவரம் பல மாதங்கள் நீட்டித்தது. இதனால் அங்கே இணையச் சேவை முடக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் உச்ச நீதிமன்றம் கூட இந்த விவகாரத்தில் தலையிட்டது. உச்ச நீதிமன்ற தலையிட்ட பிறகு இணையச் சேவை படிப்படியாக மீண்டும் வழங்கப்பட்டது.

வெள்ளம்: அடுத்து வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டில் ஏற்பட்ட பெருவெள்ளம். இந்த ஆண்டு பருவமழை காரணமாக வட இந்தியா முழுவதும் பலத்த மழை பெய்தது. இதில் 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இமாச்சல் பிரதேசத்தில் மட்டும் 330 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரலாற்றில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஜூலை மாதத்தில் மழை பெய்தது. அதேபோல தமிழ்நாட்டிலும் டிச. தொடக்கத்தில் சென்னையிலும், இறுதியில் தென் மாநிலங்களிலும் கனமழை கொட்டி கொட்டி தீர்த்தது. தமிழ்நாட்டில் உயிரிழப்புகள் அந்தளவுக்கு இல்லை என்றாலும் பாதிப்புகள் மிக மோசமாக இருந்தது.

ஒடிசா ரயில் விபத்து: 1995இல் ஃபிரோசாபாத் ரயில் விபத்திற்குப் பிறகு நடந்த மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்று இதுவாகும். கடந்த ஜூன் 2ஆம் தேதி இரவு ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 3 ரயில்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் பெங்களூரு- ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸின் கடைசி சில பெட்டிகளில் சில பெட்டிகள் கவிழ்ந்தன. இதில் 290 பேர் உயிரிழந்தனர். மேலும், 1200 பேர் காயமடைந்தனர்.

புது நாடாளுமன்ற கட்டிடம்: வரலாற்றுச் சிறப்பு மிக்க புது நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டது. கடந்த மே 28ஆம் தேதி புது நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டது. தொடர்ந்து செப்டம்பர் மாதம் அங்கே புது கட்டிடத்தில் கூட்டத்தொடர் நடைபெற்றது. அப்போது தான் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 33% இட ஒதுக்கீடு மசோதாவும் தாக்கலானது. இது இந்திய வரலாற்றில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. சுரங்க விபத்து: உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் சிக்கிய நிலையில், பல நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு அவர்கள் மீட்கப்பட்டனர். உத்தர்காசியில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் 41 தொழிலாளர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர். 17 நாட்கள் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன.

வண்ண புகை குண்டு வீச்சு: டிசம்பர் மாதம் ௧௩ம் தேதி நாடாளுமன்ற கூட்டம் நடந்து கொண்டிருந்த போது பார்வையாளர் கூடத்தில் இருந்து குதித்த இருவர் சபையின் மைய பகுதிக்குள் வண்ண புகை குண்டுகளை வீசி பரபரப்பை ஏற்படுத்தினர். அவர்கள் இருவரையும் எம்பிக்கள் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News