ஸ்மார்ட்வாட்ச் மோகம் குறைகிறதா? மந்தநிலையில் விற்பனை!
நாட்டில் ஸ்மார்ட் வாட்சுகள் விற்பனையில் முதல்முறையாக தேக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.;
நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் 0.3 சதவிகித உயர்வை மட்டுமே (கடந்த ஆண்டை ஒப்பிடும்போது) இந்த துறை அடைந்துள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. கவுண்டர்பாயிண்ட் மேற்கொண்ட ஆய்வில், கடந்த ஆண்டு 77 சதவிகிதமாக இருந்த முதல் மூன்று வாட்ச் தயாரிப்பாளர்களின் ஒருங்கிணைந்த சந்தை பங்களிப்பு, இந்தாண்டு 66 சதவிகிதமாக குறைந்துள்ளது.
சமீப ஆண்டுகளில் இரண்டு மற்றும் மூன்று இலக்கங்களில் வளர்ச்சியை எதிர்கொண்ட சந்தை நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் மந்த நிலையை அடைந்துள்ளது.
முதன்மையான பிராண்டுகள் கூட அவர்களின் கையிருப்பை விற்பதில் சிரமத்தை எதிர்கொண்டதாக சந்தை ஆய்வு நிபுணர் அன்ஷிகா ஜெயின் கூறியுள்ளார்.
முதன்மையான பிராண்டுகளில் ஃபயர் போல்ட் முதலிடத்திலும் அடுத்த இடங்களில் நாய்ஸ் மற்றும் போட் நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
பிரீமியம் பிரிவில் ஆப்பிள் வாட்சுகள் 3 மடங்கு வளர்ச்சியை சந்தித்துள்ளது. ஆப்பிள் சிரீஸ் 9 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடல்களுக்கு சந்தையில் தேவை இருந்து வருகிறது. அதே போல விற்பனையான சாம்சங் வாட்சுகளில் 50 சதவிகிதத்துக்கு மேலானவை கேலக்ஸி வாட்ச் 6 சிரீஸ் மாடலை சேர்ந்தவை என அறிக்கை தெரிவிக்கிறது.
குறைவான விலை கொண்ட அலங்கார பொருளாக உருவாகி வந்த வாட்சுகளின் மீதான ஆர்வம் மக்களுக்கு குறைந்துள்ளதாகவும் சந்தை விரைவில் இரட்டை இலக்கத்தில் சரிவை சந்திக்குமெனவும் வல்லுநர்கள் கணிக்கின்றனர். ஸ்மார்ட் வாட்சுகளின் பயன்பாடு மாறுகிறபோது சந்தை மீளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.