தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: வாகன சோதனை தீவிரம்

Rules of Conduct of Elections Enforcement லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. தமிழகம் முழுவதும் தீவிர வாகன சோதனை அமல்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2024-03-18 04:16 GMT

Rules of Conduct of Elections Enforcement

இந்தியாவின் லோக்சபாவிற்கு வரும் மே மாதத்தோடு பதவிக் காலம் முடிவடைய உள்ளது. இதற்காக 18 வது லோக்சபாவிற்கான தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டு கடந்த 17 ந்தேதி தேர்தல் தேதியை அறிவித்தது.

இதில் இந்தியா முழுவதும் உள்ள 544 லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார். இதனையொட்டி நாடுமுழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான கட்டுப்பாடுகள் என்னென்ன என்பதை அறிவித்துள்ளது.

தேர்தல் தேதி அறிவித்த நிமிடம் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. தேர்தல் நடைமுறைகள் முடியும் வரை இந்த நாடு முழுவதும் தேர்தல் கமிஷன் கட்டுப்பாட்டில்தான் இருக்கும்.இந்திய அரசியலமைப்பு சட்டம் 324 வது பிரிவின்படி தேர்தலை அமைதியாகவும் வெளிப்படையாகவும் நடக்க இந்த விதிகளை அமல்படுத்த தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விதிகளானது அனைத்து அரசியல் கட்சிகள் , வேட்பாளர்கள், அரசு அதிகாரிகள் பொதுமக்களுக்கும் பொருந்தும். தேர்தல் நடைமுறைகள் முடியும் வரை, தேர்தல் பணியில் ஈடுபடும் மத்திய மாநில அரசு அதிகாரிகள் , தேர்தல் கமிஷனின் உத்தரவுகளை மட்டுமே செயல்படுத்த வேண்டும்.

1960 ம் ஆண்டு முதல் அமல்

தேர்தல் கமிஷனின் இந்த கட்டுப்பாட்டு விதிமுறைகளானது முதன் முதலாக 1960 ம் ஆண்டில் நடந்த கேரள மாநில சட்டசபை தேர்தலில் இருந்து அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் இது 1962 ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலிலும் அறிமுகம் செய்யப்பட்டது.

Rules of Conduct of Elections Enforcement


கடந்த 1967 ம் ஆண்டு முதல் நாடுமுழுவதும் நடக்கும் லோக்சபா தேர்தலிலும், மற்றும் அனைத்து மாநில சட்டசபை தேர்தல்களிலும் இந்த நடைமுறையானது அமல்படுத்தப்பட்டது.

என்னென்ன கட்டுப்பாடுகள்-?

தேர்தல் கமிஷனின் தேர்தல் நடைமுறைகள் விதிகளின் படி எந்த அரசுகளும் எவ்வித புதிய அறிவிப்புகளை வெளியிடக்கூடாது. திட்டங்கள் திறப்பு விழா, அடிக்கல் நாட்டு விழா, நடத்தக்கூடாது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட துவக்கப்பட்ட திட்டங்களை மட்டுமே செயல்படுத்த முடியும்.

அமைச்சர்கள் உள்ளிட்டோர், அதிகாரப்பூர்வ கார்கள் உள்ளிட்ட வாகனங்களை அரசு பணிக்கு மட்டுமே பயன்படுத்தலாம். தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்த முடியாது. எந்த சூழ்நிலையிலும் பொதுநிதியை அவர்களுடைய தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தக்கூடாது.

அதேபோல் மசூதி, கோயில் , சர்ச் , குருத்வாரா உள்ளிட்ட எந்தவொரு வழிபாட்டுத்தலத்தையும் அரசியலுக்கு பயன்படுத்தக்கூடாது. மதம், ஜாதி ரீதியில் உணர்வுகளைத் துாண்டும் வகையில் ஓட்டுகளைப் பெறுவதற்காக கருத்து தெரிவிக்க கூடாது. பேசக்கூடாது.

அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் டிரான்ஸ்பர்கள் மேற்கொள்ள முடியாது. தவிர்க்க முடியாத பட்சத்தில் இதற்காக தேர்தல் கமிஷனின் ஒப்புதலைப் பெற வேண்டியது கட்டாயம்.

வாக்குப்பதிவு நடப்பதற்கு முந்தைய மற்றும் பிந்தைய 48 மணி நேரங்களில் எந்த வித கருத்துக்கணிப்பும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை ஊடகங்கள் வெளியிடக்கூடாது.

பொதுமக்களுக்கும் இந்த விதிகள் பொருந்தும். ஒரு வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்பவர் வாக்குச்சாவடிக்கு 100 மீட்டர் பரப்புக்குள் மொபைல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை யாரும் எடுத்துச் செல்லமுடியாது.

இந்த விதிகளை மீறினால், இந்திய தண்டனைச் சட்டம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.

தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு விட்டதால் எந்த பணம் எடுத்துச் சென்றாலும் அதற்கான உரிய ஆவணங்கள் இருக்க வேண்டும். உரிய ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளதால் பொதுமக்கள் உரிய ஆவணங்களோடு பணத்தை எடுத்துச் செல்ல வேண்டியது மிக மிக கட்டாயம். 

Tags:    

Similar News