குமாரபாளையம் நகராட்சி பொறுப்பு ஆணையர் விடுவிப்பு..!
குமாரபாளையம் நகராட்சி பொறுப்பு ஆணையர் விடுவிப்பு.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.;
குமாரபாளையம்:
நகராட்சி ஆணையாளர் பொறுப்பிலிருந்து, ராசிபுரம் கணேஷ் விடுவிக்கப்பட்டுள்ளார். குமாரபாளையம் நகராட்சியின் ஆணையர் பொறுப்பினை திருச்செங்கோடு அருள் மேற்கொள்வாரென அறிவிக்கப்பட்டுள்ளது.
குமாரபாளையம் நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த குமரன் பதவி உயர்வு பெற்று மாறுதலானார். இதையடுத்து கடந்த மூன்று மாதங்களாக, இங்கு புதிய ஆணையாளர் பணியிடம் நிரப்பப்படவில்லை. நகர மக்களின் அன்றாட அடிப்படை தேவைகளை மேற்பார்வை செய்வதற்கும், நகராட்சி பணியாளர்களை திறம்பட நிர்வாகித்து வரி வருமானங்களை மேம்படுத்திடவும், நகராட்சிக்கு புதிய ஆணையர் நியமிக்கப்பட வேண்டுமென கோரிக்கை எழுந்தது. இதையடுத்து ராசிபுரம் நகராட்சி ஆணையாளர் கணேசுக்கு, குமாரபாளையம் நகராட்சி ஆணையர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது. ராசிபுரத்திலிருந்து குமாரபாளையம் சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதால் இரண்டு நகராட்சிகளையும் நிர்வாகிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால், அன்றாட பணிகள் முடங்கின.
கோப்புகளில் ஆணையாளரின் ஒப்புதலை பெற ராசிபுரத்திற்கும் குமாரபாளையத்திற்கும் சென்று வரவேண்டியதால், அலுவலர்களுக்கு அதிக நேரம் தேவைப்பட்டது. இதனால் குமாரபாளையம் நகராட்சிக்கு புதிய ஆணையரை நியமிக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் குமாரபாளையத்தின் கூடுதல் பொறுப்பை கவனித்து வந்த ராசிபுரம் கணேஷ் அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு திருச்செங்கோடு நகராட்சி ஆணையர் அருளுக்கு குமாரபாளையம் நகராட்சியின் கூடுதல் ஆணையர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.