ஓமலூர் அருகே தனியார் பஸ் சிறைபிடிப்பு..!
ஓமலூர் அருகே தனியார் பஸ் சிறைபிடிப்பு.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.;
சேலம் மற்றும் தர்மபுரியில் இருந்து தனியார் மற்றும் அரசு பஸ்கள் இடைநில்லா பஸ்கள் என சில பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு இயக்கப்படும் பஸ்கள், ஓமலூர் அருகே உள்ள குதிரைக்குத்தி பள்ளம், பண்ணப்பட்டி பிரிவு, பூசாரிப்பட்டி, தாச்சமுத்திரம், தளவாய்பட்டி ஆகிய பகுதிகளில் நின்று பயணிகளை ஏற்றி இறக்காமல் சென்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் அவ்வப்போது சிறைபிடித்து போராட்டம் நடத்துவது தொடர்கதையாக உள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை சேலத்தில் இருந்து தர்மபுரிக்கு தனியார் பஸ் ஒன்று சேலம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. அந்த பஸ்சில் தளவாய்பட்டி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஏறி உள்ளார். ஆனால் கண்டக்டர் இடைநில்லா பஸ் எனவும், தளவாய்பட்டியில் நிற்காது எனவும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் இதுகுறித்து தளவாய்பட்டியில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே 50-க்கும் மேற்பட்டோர் தளவாய்பட்டி பஸ் நிறுத்தத்தில் அந்த தனியார் பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து டிரைவர் ரோட்டிலேயே பஸ்சை நிறுத்தியதால் சேலம்-தர்மபுரி தேசியநெடுஞ்சாலையில் அரைமணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் மற்றும் போலீசார் பொதுமக்களை சமரசம் செய்தனர்.