மிசோரமில் இந்திய ராணுவத்தினரிடம் சரணடைந்த மியான்மர் ராணுவ வீரர்கள்

மிசோரமில் இந்திய ராணுவத்தின் அசாம் ரைபிள் பிரிவினரிடம் மியான்மர் ராணுவ வீரர்கள் சரண் அடைந்துள்ளனர்.

Update: 2023-12-31 14:40 GMT

இந்திய ராணுவ வீரர்களிடம் சரண் அடைந்த மியான்மர் ராணுவ வீரர்கள்.

மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆயுத குழுக்கள் போரில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய எல்லையில் உள்ள மியான்மர் பகுதிகளை இந்த ஆயுதக் குழுக்கள் கைப்பற்றி வருகின்றனர். இதனையடுத்து மியான்மர் ராணுவ வீரர்கள் இந்திய பகுதிக்குள் நுழைந்து இந்திய பாதுகாப்பு படையினரிடம் தஞ்சம் அடைவது தொடருகிறது.

மிசோரம் எல்லையில் 2 குழுக்களாக மியான்மர் ராணுவத்தினர் இந்திய படையினரிடம் டிசம்பர் 29-ந் தேதி சரணடைந்தனர். முதலில் 83 பேர் கொண்ட மியான்மர் ராணுவ குழு சரணமடைந்தது. பின்னர் மேலும் 68 பேருடன் மற்றொரு மியான்மர் ராணுவ குழுவும் சரணடைந்தது. அதே நேரத்தில் இந்தியா- மியான்மர் எல்லை வனப்பகுதியில் மேலும் பல மியான்மர் ராணுவத்தினர் தலைமறைவாக பதுங்கி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

சரணடைந்த அனைத்து மியான்மர் ராணுவ வீரர்களும் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினர் பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சரணடைந்த மியான்மர் இவர்கள் அனைவரும் அடுத்த ஓரிரு நாட்களில் முறைப்படி மியான்மர் ராணுவ வசம் ஒப்படைக்கப்பட உள்ளனர். 

இது தொடர்பாக அஸ்ஸாம் ரைபிள்ஸ் படைப் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், சரணடைந்த மியான்மர் ராணுவத்தினர் சிலர் படுகாயமடைந்த நிலையில் உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மியான்மர் எல்லையில் உள்ள லாங்டலி மாவட்டத்தில்தான் மியான்மர் ராணுவத்தினர் சரணடைந்துள்ளனர்.

கடந்த காலங்களில் சரணடைந்த மியான்மர் ராணுவ வீரர்கள் விமானம் மூலமாகவும் மணிப்பூர் மோரே நகரம் தரை மார்க்கமாகவும் அந்நாட்டு ராணுவத்தினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டனர். அதேபோல தஞ்சமடைந்த 151 ராணுவத்தினரும் மியான்மர் ராணுவத்திடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்படுவர் என்றனர்.

கடந்த நவம்பர் மாதமும் இந்தியாவுக்குள் 75 மியான்மர் ராணுவ வீரர்கள் நுழைந்து தஞ்சமடைந்தனர். முதலில் மிசோரம் போலீசாரிடம் சரணடைந்த 75 பேரும் பின்னர் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News