மின்னுவதெல்லாம் பொன்னா..? நீங்களே சொல்லுங்க..!
All That Glitters is Not Gold Meaning in Tamil-பறக்கறதெல்லாம் பருந்தாகுமா..? கூவுறதெல்லாம் குயிலாகுமா..? அதேபோலத்தான் மின்னுவதும்.
All That Glitters is Not Gold Meaning in Tamil-மின்னுவதெல்லாம் பொன்னாகுமா? என்பது தமிழில் கூறப்பட்டுள்ள ஒரு அழகான பொன்மொழி. அதன் பொருள் என்ன என்பதை ஒருவர் கூறித்தான் அதை தெரிந்துகொள்ளவேண்டும் என்பது இல்லை. இருப்பினும் சிலருக்கு புரியும்படியாக 'நச்' னு சொல்ல விழைகிறோம்.
அதற்கு உங்களுக்கு ஒரு கதை சொல்லப்போறேன்.
கன்னியாகுடி என்ற ஊரில் கோதண்டம் என்பவன் வாழ்ந்துவந்தான். அவனது பெற்றோர் இருவரும் கோதண்டனையும் அவனது தங்கை சூலாயியையும் விட்டுவிட்டு இறந்துபோனார்கள். ஏதோ விஷக்காய்ச்சல் என்று மருத்துவர்கள் கூறினார்களாம்.
கோதண்டத்தின் கையைப்பிடித்து அவனது தாய் வேலம்மாள், கோதண்டத்தைவிட 5 வயது சிறியவளான சூலாயி கையை ஒப்படைத்து, 'தங்கச்சியை கைவிட்றாதடா தம்பி கோதண்டம். அவளை நல்ல மாப்பிள்ளை பார்த்துக் கட்டிக்கொடுத்திடு' என்று சொல்லிவிட்டு கண்ணை மூடிக்கொண்டாள் வேலம்மாள்.
கோதண்டத்துக்கு சின்ன வயசில் இருந்தே தங்கச்சி சூலாயி மீது நல்ல பாசம். சூலாயி நல்ல கருப்புநிறம். ஆனாலும் அழகில் குறையேதும் இல்லை. கருப்பு என்பது ஒரு நிறம் மட்டும்தான் என்பதை நம்ம மக்களுக்கு சொல்லித்தான் புரிய வைக்கணும்.தலையில் மட்டும் முடி கருப்பா இருக்கணுமாம். ஆனால் கருப்பு தோல் என்றால் பிடிக்காதாம்.
பொண்ணு கருப்பா சிவப்பான்னு தோலின் நிறத்தைப் பார்க்காம குணத்தைப் பார்க்கணும்.கருப்பு நிறத்தை ஒதுக்குவது இந்த சமூகத்தில் உள்ள மாபெரும் மனநோய். அதை அவ்வளவு எளிதாக மாற்றிவிட முடியாது.
கோதண்டம் சூலாயியை எந்த குறையும் இல்லாமல் வளர்த்தான். பெற்றோர் விட்டுச் சென்ற நிலத்தில் நேரம் காலம் பார்க்காமல் உழைத்து பணங்காசு சேர்த்தான்.
தங்கச்சியை நல்ல இடத்தில் கட்டிக்கொடுக்கவேண்டும் என்பது அவனது கவலை. சூலாயிக்கு 20 வயசு ஆனபோது, பக்கத்து ஊரான மாங்குடியில் இருந்து சூலாயியை பெண்கேட்டு வந்தார்கள்.
'மாப்பிள்ளை கூட்டுறவு சொசைட்டில கிளர்க்கு வேலை செய்யறாராம். 12வது வரை படிச்சிருக்காராம். மாசம் ஆயிரம் ரூவா சம்பளம் கிடைக்குதாம். காடு கரையும் இருக்குதாம். ஒரு தங்கச்சியை கண்ணாலம் பண்ணி கொடுத்தாச்சாம்..' என்று பக்கத்து வீட்டு பட்டாளத்து பாட்டாவிடம் மூச்சுவிடாமல் ஒப்பித்தான் கோதண்டம்.
அப்பிடியாடா..சந்தோசம்டா.. வரட்டும்..வரட்டும்..வந்து பொண்ணை பார்க்கட்டும். நாம எல்லாரும் சேந்து கண்ணாலத்தை முடிப்போம்' என்றார் பட்டாளத்து பாட்டா சந்தோசமாக. (அவர் இந்திய ராணுவத்தில் சிப்பாயாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்)
பொண்ணு பார்க்க வந்த அன்று ஊர் ஜனங்களே கோதண்டம் வீட்டில் அவனுக்கு ஒத்தாசை செய்தனர். வடை போட்டு, கொள்ளையில் பறித்த வாழைக்காயில் பஜ்ஜி போட்டனர். அந்த ஊரிலேயே பத்தாம் கிளாஸ் படித்த இளம்பெண் சூலாயிக்கு சேலைகட்டிவிட்டு தலை சீவி அழகு படுத்தியிருந்தாள்.
சூலாயி கருப்பாக இருந்தாலும் லட்சுமி கலையுடன் அம்சமாக இருந்தாள். அண்ணன் கோதண்டம் தங்கையைப்பார்த்து மகிழ்ச்சியில் துள்ளினான். இருந்தாலும் கல்யாணம் பண்ணி முடித்தால் நம்மைவிட்டு போய் விடுவாளே என்ற கவலையும் அவனை சூழ்ந்தது.
வந்தார்கள் வடை, பஜ்ஜி, காப்பித்தண்ணி குடித்தார்கள். பெண்ணை வரச் சொன்னார்கள். பார்த்தவுடன் 'என்ன பொண்ணு கருப்பா இருக்குது' என்று படக்கென்று சொன்ன மாப்பிள்ளை பையனின் அம்மா மீது பட்டாளத்து பாட்டாவுக்கு கோபம் வந்துவிட்டது.
'எம்மா நெறமா முக்கியம்? பொண்ணு லட்சுமியாட்டம் இருக்குது. அந்த பய கோதண்டம் அந்த புள்ளய தங்கமா வளத்துஇருக்கான். அந்த பொண்ணு கொணத்துக்கு, இந்த ஜில்லாவிலேயே ஒங்களுக்கு அவளாட்டம் ஒரு பொண்ணு கெடைக்காது. ஆமாஞ்சொல்லிபுட்டேன்..' என்றார் மூச்சுவிடாமல்.
'அதெல்லாம் சோளிக்கு ஆவாதுங்க..' என்ற மாப்பிள்ளையின் அம்மா, ' வாங்க போகலாம். வேற பொண்ண பார்ப்போம். இதென்ன கன்னங்கறேன்னு இருக்குது.' என்று புறப்பட்டாலும் மாப்பிள்ளை பையன் சூலாயியை வைத்தக்கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே போய்விட்டான்.
கோதண்டம் அழுகத் தொடங்கிவிட்டான். 'டேய். பொழப்பத்த பயல. நீ ஏண்டா அழவர. சூலாயிய கட்டிக்க அந்த பய குடுத்து வைக்கலடா..அதெல்லாம் நல்ல மைனரு கணக்கா மாப்பிள வருவான்..போடா..சூலாயிக்கு சொல்லுடா..' என்று பட்டாளத்து பாட்டா விரட்டினார்.
ஆனால், சூலாயி அதைப்பற்றி கவலையே பாடலை. ' அட போண்ணா.. கண்ணாலம் ஆயிட்டா ஒன்னய விட்டுட்டு போகணுமேன்னு கவலைப்பட்டேன். கடவுளாப்பாத்து எனக்கு வழி காட்டிடுச்சி' என்றாள் புன்னகையோடு, கண்கலங்க.
கோதண்டம் தங்கச்சியைக் கட்டிப்பிடித்து அழுதான். 'போங்க..போங்க கழுதைகளா..இன்னிக்கு இல்லன்னா நாளைக்கு கண்ணாலம் நடக்காமலா போய்டும்? ஏனாத்தா..உங்கொண்ணனுக்கு கண்ணாலம் ஆகவேணாமா..?' என்று சிரித்தவாறு வெளியேறினார் பட்டாளத்து பாட்டா.
ஊர் மக்களும் கோதண்டத்துக்கு ஆறுதல் கூறிவிட்டு அவரவர் சோளிக்குச் சென்றுவிட்டனர். இப்படி அந்த பொண்ணு பார்த்த சம்பவத்தையே மறந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. திடீரென ஏற்கனவே பெண் பார்த்துச் சென்ற அந்த அம்மா கோதண்டம் வீட்டுக்கு வந்தாங்க.
வீட்டுக்கு வெளியே நின்று, 'தம்பி.. தம்பி' என்று கோதண்டத்தை கூப்பிட்டார். ஆனால், அந்த அம்மா கூப்பிடுவதைப்பார்த்த பட்டாளத்து பாட்டா, 'என்னம்மா இந்த பக்கம்? எதுக்கு கோதண்டத்தை அழைக்கிறீங்க..? அவன் வயலுக்கு போயிருக்கான்.' என்றார்.
'அதுவும் நல்லதுதான் சாமி. நீங்கதான் என் மவனுக்கு இந்த பொண்ணை(சூலாயியை) பேசி கண்ணாலம் பண்ணி வைக்கணும்.' என்று கெஞ்சினார்.
'என்னம்மா திடீர்னு ஞானம் பொறந்துடிச்சி?' என்றார் கிண்டலாக.
'உண்மைதாங்க..மின்றதெல்லாம் பொன்னு இல்லைன்னு சும்மாவா சொன்னாங்க? நல்ல நெறமா பாத்த ஒரு பொண்ணுக கூட அழகும் இல்ல..அடக்கம் ஒடுக்கம் இல்ல. உண்மையிலேயே கருப்பா இருந்தாலும் தங்கமா இருக்கற இந்த பொண்ணுதான் எங்க குடும்பத்துக்கு நல்ல பொண்ணா இருப்பா. இவதான் எங்க வீட்டு குத்துவிளக்கு. என் பையனுக்கும் இந்த பொண்ணைத்தான் ரொம்ப பிடிச்சிருக்குதுங்க ' என்றார்.
அப்புறம் என்ன 'டும்..டும்..டும்' கொட்டியாச்சு . ஊர் மக்களே நின்று செஞ்சு வச்ச கண்ணாலம். ஆனா கோதண்டமும் சூலாயியும் விட்ட கண்ணீரால எங்க ஊரு கெணறு ரொம்பிப்போச்சு என்கிறார்கள் ஊர்க்காரர்கள்.
(முற்றும்)
இப்போ தெரியுதா மின்னுவதெல்லாம் பொன்னாகாது எப்படின்னு.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2