அமைச்சர்கள், அதிகாரிகள் எதிர்ப்பு : ஆனாலும் திட்டத்தை நிறைவேற்றிய காமராஜர்..!

இந்த ஒரு சம்பவம்தான் தமிழ்நாட்டின் தலையெழுத்தை ஏன் இந்தியாவிலேயே ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது என்று நிச்சயமாக உறுதிபடச் சொல்லலாம்.

Update: 2024-10-29 06:57 GMT

கிராம சுற்றுப்பயணத்தின்போது கிராமத்து பெண் ஒருவர் கூறுவதை கூர்ந்து கவனிக்கும் முதலமைச்சர் காமராஜர். 

அப்படி என்ன பெரிய விஷயத்தைச் சொல்லப் போறீங்கன்னு கேட்டுதாதீங்க. நீங்களே படிச்சால் தெரிஞ்சிக்குவீங்க. சரி..இப்ப அந்த விஷயத்துக்கு வருவோம்.

தென்தமிழகத்தில் சுற்றுப்பயணம்...

ஒரு முறை,தமிழக முதல் அமைச்சராக இருந்த காமராஜர் ஐயா,தென்தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவரது கார் வயல்வெளிகளைக் கடந்து சென்றுகொண்டிருந்தது.

அம்பாஸடர் காரின் பின்னிருக்கையில் அமர்ந்து வயல்வெளிகளை பார்த்துக்கொண்டே வந்தார் காமராஜர் ஐயா.

வயல்வெளியில் குழந்தைகளும் வேலை செய்வதைக் கண்டு அதிர்ச்சியான காமராஜர், காரை நிறுத்தும்படி கூறினார். காரில் இருந்து இறங்கிய அவர் விறு விறுவென்று வயல்வெளிக்குள் நடந்து சென்றார்.அங்கு வேலை செய்த பெண்களிடம்,

'பிள்ளைகளை ஏன் பள்ளிக்கூடம் அனுப்பாமல் வயல்வெளியில் வேலை செய்ய விட்டு இருக்கீங்க" என்று காமராஜர் கேட்கவே, பெண்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு மௌனம் காத்தனர்.

சிறிது நேரம் கழித்து,

"ஐயா, எங்கள மன்னிக்கணும். இந்த நெலத்துல வேல செஞ்சா நெலத்து சொந்தக்காரர் ஒரு கிண்ணம் நெறைய கஞ்சி ஊத்துவருங்கைய்யா. அதுக்காகத் தான் பசங்கள பள்ளிக்கொடம் அனுப்பாம வேல செய்ய கூட்டி வந்தோம் " என்று பெண்கள் பதிலளித்தனர்.

இந்த பதிலால் காமராஜர் கவலை அடைந்தார். சாப்பாட்டுக்கு இல்லைங்கறதால படிக்க போகாம வயல்ல வேலை செய்யறாங்களே இந்த குழந்தைங்க என்று அவரது நெஞ்சம் பதறியது.

மீண்டும் காருக்குச் சென்ற காமராஜர் ஆழ்ந்த யோசனையுடனேயே இருந்தார். தலைமைச் செயலகம் சென்றவுடன் உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து,பள்ளியில் மதிய உணவுத் திட்டம் கொண்டுவருவதற்கான வரைவை ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார்.

வரைவு தயாரானவுடன்,அமைச்சரவைக்கு கொண்டுவரப்பட்டது. சில அதிகாரிகள், அமைச்சர்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது அரசுக்கு பயனற்ற செலவு, தேவையில்லாத செலவு என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன.

தமிழ்நாட்டின் கல்வியறிவு விழுக்காட்டை மேம்படுத்தவும் கிராமப்புறத்தில் வறுமையில் இருக்கும் மக்களின் பிள்ளைங்க படிக்கவும் இந்த ஒரு திட்டம் தான் சிறந்தது.

காமராஜர் கிரிக்கெட் விளையாடும் அரிய புகைப்படம். கவனியுங்கள் அவர் காலில் செருப்புக்கூட இல்லை.

இந்த ஒரு திட்டத்தால் ஏழைகள் பயனடைவாங்க. சாதாரண சமுதாயத்தில் இருந்து விஞ்ஞானிகள், பொறியாளர்கள்,மருத்துவர்கள் என பலரை உருவாக்க முடியும். இந்த சமுதாயத்தையே மாற்றும் வல்லமை உடைய திட்டம் என்று பதில் அளித்தார் காமராஜர்.

இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டு பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப் படுத்தினார்.இந்த திட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஏழை மக்கள் காமராஜரை போற்றினார்கள். பள்ளிக்குச் செல்வோர் எண்ணிக்கை உயர்ந்தது.

தமிழ்நாட்டில் ,1951ம் ஆண்டு கண்ணக்குப்படி ,கல்வியறிவு (Literacy Rate ) சதவிகிதம் வெறும் 20.8 விழுக்காடு தான். ஆனால் இந்த திட்டம் அறிமுகம் செய்த பின்,1971ம் ஆண்டு கல்வியறிவின் சதவிகிதம் 45 விழுக்காடு.அதாவது 20 ஆண்டுகளில் நம் மாநிலத்தின் கல்வியறிவு விழுக்காடு இரட்டிப்பு ஆனது. குறிப்பாக பெண்களின் கல்வி சதவிகிதம் , 1951ம் ஆண்டில் வெறும் 10 விழுக்காடுதான் .அதுவே 1971ம் ஆண்டு,31 விழுக்காடாக உயர்ந்தது. 20 ஆண்டுகளில்,பெண்களின் கல்வி சதவிகிதம் மூன்று மடங்கு உயர்ந்தது.

ஒருத்தருக்கு பொருளாகவோ அல்லது பணமாகவோ கொடுத்து உதவி செய்தால், அந்த உதவியால் ஒருவர் மட்டுமே அல்லது அவரைச் சார்ந்தவர்கள் மட்டுமே பயனடைவார்கள். ஆனால் கல்வியைக் கொடுத்தால் அவர் மட்டுமல்ல அவரை சார்ந்தவர் மட்டும் அல்லாமல் ஒருவரின் தலைமுறையே பயனடையும். ஆக ஒரு சமுதாயமே பயனடையும். அதுதான் காமராஜர் சிந்தனை. அதனால்தான் அவர் படிக்காத மேதையானார்.

இந்த திட்டம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதும், எதிர்த்த அமைச்சர்களும் அதிகாரிகளும் காமராஜரிடம்,'ஐயா எங்களை மன்னிக்கணும். உங்களை புரிஞ்சிக்காம பேசிட்டோம்' என்று வருத்தம் தெரிவித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கூடுதல் தகவல் :

இந்த மதிய உணவு திட்டத்தை தமிழகம் முழுவதும் அறிமுகப்படுத்தியது காமராஜராக இருந்தாலும், இதற்கு பிள்ளையார் சுழி போட்டது தியாகராய செட்டி அவர்கள் தான் .

ஆம். 1920ம் ஆண்டு, தியாகராய செட்டி அவர்களின் ஆலோசனையை வைத்து தான் அன்றைய மெட்ராஸ் ப்ரெசிடென்சியின் முதல் அமைச்சர் சுப்பராயலு ரெட்டியார், மெட்ராஸ் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஒரு கார்ப்பரேஷன் பள்ளியில் இந்த உணவு திட்டத்தை ஆரம்பித்தார்.

ஒரு பள்ளியில் ஆரம்பித்த இந்த திட்டம் படிப்படியாக நான்கு பள்ளியாக உயர்ந்தது. இந்த திட்டத்தில் காலையில் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு சிற்றுண்டி அளிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கும் வரவேற்பு கிடைத்தது.

ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கம் முதலில் இந்த திட்டத்தை செய்தது. பிறகு 1925 ஆம் ஆண்டு இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒரு துளியை வைத்துத் தான், காமராஜர் ஐயா, மதிய உணவு திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் கொண்டுவந்து நம் மாநிலத்தின் தலையெழுத்தையே மாற்றவிட்டார். ஏன் நம் நாட்டின் தலையெழுத்தையே மாற்றிவிட்டார் என்று கூறலாம். ஆமாம் இந்த திட்டம் இப்போது இந்தியாவில் பல மாநிலங்களிலும் நடைமுறையில் உள்ளது.

இந்த ஒரு திட்டத்தால் எத்தனை மருத்துவர்கள்,பொறியாளர்கள்,விஞ்ஞானிகள்,IAS அதிகாரிகள்,இன்னும் பல துறை வல்லுநர்கள் உருவாகி இருப்பார்கள். இன்றைக்கும் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் எதிர்காலத்தில் உருவாகுவார்கள் என்று எண்ணிப் பாருங்கள்.

ஒரு சாப்பாட்டு விஷயம் என்று அன்று அலட்சியம் காட்டி இருந்தால், இன்று தமிழகம் கல்வியில் இந்த உயர்ந்த நிலையை அடைந்து இருக்க முடியாது. அதனால் நமது சமுதாயத்தில்,ஏன் நமது நாட்டில் எவ்வளவு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதனால்தான் இன்றும் காமராஜரை நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். இருந்தாலும் மறைந்தாலும் ஊர் சொல்லவேண்டும்.

Tags:    

Similar News