ஸ்ரீ ராகவேந்திரர் படத்தில் ஐட்டம் சாங்க்..! அப்றம் என்னாச்சு?

ஸ்ரீ ராகவேந்திரர் படத்தில் பாலச்சந்தர் செய்த சிறு திருத்தம், அதன் இயக்குனர் முத்துராமனுக்கு பெரும் புகழ் பெற்றுத்தந்தது.

Update: 2024-05-21 13:00 GMT

பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனத்திற்காக, "ஸ்ரீ ராகவேந்திரர்" என்ற திரைப்படத்தை, எஸ்.பி.முத்துராமன் இயக்க ஒப்புக்கொண்ட பொழுதே பாலச்சந்தர், "இது லாப நஷ்டத்தை பார்த்து எடுக்கும் படம் அல்ல, அதனால் நீங்கள் இந்த படத்தை எவ்வளவு தூய்மையாக எடுக்கிறீர்களோ, அவ்வளவு நல்லது" என்ற ஒரு சிறிய வேண்டுகோளுடன் தான் "ஸ்ரீ ராகவேந்திரர்" திரைப்படத்தை தொடங்கினார்.

ஆனால் எப்பொழுதும் தயாரிப்பாளருக்கு நஷ்டம் வைக்காத இயக்குநரான எஸ்.பி.முத்துராமன், இந்த படத்தில் வியாபார நோக்கத்திற்காக ஒரே ஒரு ஐட்டம் பாடலை வைத்திருக்கிறார். அதாவது முஸ்லிம் மன்னரான சத்யராஜும், ஒரு பம்பாய் நடன பெண்ணும் இணைந்து ஆடுவது போல் ஒரு நடன காட்சியை எஸ்.பி.முத்துராமன் எடுத்திருக்கிறார்.

ரஜினிகாந்த் ராகவேந்திரராக ஜீவ சமாதியாகும் அந்த காட்சியில், அவருடன் நடித்த அனைவரும் கதறி அழுது இருக்கிறார்கள்... அப்படி ஒரு பிரமாதமான பெர்ஃபார்மன்ஸ்'ஐ ரஜினிகாந்த் கொடுத்திருப்பார்... படம் நன்றாக வந்திருப்பதாக முத்துராமனுக்கு மிக திருப்தி. படத்தை கே.பாலச்சந்தருக்கு போட்டு காட்டியிருக்கிறார்.

படத்தைப் பார்த்த கே.பாலச்சந்தர் முத்துராமனின் கைகளைப் பிடித்துக் கொண்டு "மிகப் பிரமாதமாக இயக்கியிருக்கிறீர்கள். எனக்கு ரஜினிகாந்த்'தே தெரியவில்லை. சாட்சாத் ஸ்ரீ ராகவேந்தரை பார்ப்பது போலவே இருக்கிறது. மிகுந்த மகிழ்ச்சி. ஆனால் நீங்கள் கமர்ஷியலுக்காக ஒரு பாடலை சேர்த்து இருக்கிறீர்கள். அது என்னுடைய நல்லதுக்குத்தான் என்று தெரியும். ஆனாலும் இப்பேர்ப்பட்ட புனிதமான ஒரு படத்தில், அந்த ஒரு ஐட்டம் டான்ஸ் தேவை இல்லை. மக்கள் யாரும் அதைப்பார்த்து விடக்கூடாது. தயவுசெய்து அதை வெட்டி எடுத்து விடுங்கள்" என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அவரின் எண்ணப்படியே எஸ்.பி.முத்துராமனும் அந்த பாடலை கட் செய்து விட்டார். இன்றளவும் ஸ்ரீ ராகவேந்திரரை தெய்வமாக வணங்கும் மக்களின் இல்லங்களில், இந்தப் படம் உள்ளது. இந்த படம் இல்லாத ராகவேந்திர பக்தர்களின் வீடே இருக்கவே இருக்காது. அத்தனை ராகவேந்திர பக்தர்களின் இல்லங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இந்தப் படம்.

இன்றளவும் திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர மடத்தில், எந்த விழாவாக இருந்தாலும் முதலில் இயக்குநர் எஸ்.பி.முத்துராமனை கௌரவிக்கிறார்கள். இப்படி ஒரு கௌரவம் வேறு எந்த இயக்குனருக்கும் கிடைக்குமா என்பது தெரியவில்லை.

"தனக்கு இப்படி ஒரு கௌரவம் கிடைத்தது, தன் வாழ்நாளில் தனக்கு கிடைத்த மிகப்பெரும் கொடுப்பினை" என்று குறிப்பிடுகிறார் முத்துராமன். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.. ஒருவேளை எஸ்.பி.முத்துராமன், அந்த ஐட்டம் பாடலை மட்டும் இந்த படத்தில் வைத்திருந்தால், அனைத்து பக்தர்களின் வீடுகளிலும் இந்த திரைப்படத்தை பொக்கிஷம் போல பாதுகாத்து தினசரி போட்டு பார்ப்பார்களா? இல்லை ஸ்ரீ ராகவேந்திர மடத்தில் தான் முத்துராமன் அவர்களை கூப்பிட்டு கௌரவப்படுத்தும் நிகழ்ச்சிகள் நடந்திருக்குமா?

தன்னுடைய வருமானம் முக்கியம் என்று நினைத்திருந்தால், நிச்சயம் பாலச்சந்தர் அந்த ஐட்டம் டான்ஸை அனுமதித்திருப்பார். ஆனால் இப்படி ஒரு புனிதமான படத்தில் அப்படி ஒரு பாடல் இடம் பெற்று விடக்கூடாது என்று நினைத்து, அந்த படத்தில் பாலச்சந்தர் செய்த ஒரு சிறிய திருத்தம் தான், இன்றளவும் எஸ்.பி. முத்துராமன் வாழ்நாள் பெருமைக்கு காரணமாக அமைந்திருக்கிறது.

Tags:    

Similar News