அடுத்த கமல்ஹாசன் என போற்றப்பட்டவரை தெரியுமா?
அடுத்த கமல்ஹாசன் என்று போற்றப்பட்டவர் அட்ரஸே இல்லாமல் போன பரிதாபம். காஜா ஷெரீப்பின் தற்போதைய நிலை!;
எத்தனையோ நடிகர்கள் தோன்றி மறைந்தாலும் அவர்கள் நடித்த ஒரு சில படங்கள் காலத்திற்கும் அவர்களை நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கும். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னாளில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கப் போகிறவர் தான் என்ற நம்பிக்கையோடு சினிமாத் துறையில் அடியெடுத்து வைத்தவர் தான் காஜா ஷெரீப். இயக்குநர் இமயம் கே.பாலச்சந்தரால் அடுத்த கமல்ஹாசன் என்று புகழப்பட்டவர் தான் காஜா ஷெரீப். 1980-களில் தமிழின் முன்னணி படங்கள் அனைத்திலும் குழந்தை நட்சத்திரமாக இருந்தார்.
மகேந்திரன் இயக்கிய தமிழ் சினிமாவின் எவர்கிரீன் படமாக உதிரிப்பூக்கள் திரைப்படத்தில் ‘‘அழகிய கண்ணே.. அரும்புகள் நீயே’’ பாடல் மூலம் அப்பாவி முகமும், அழகிய தோற்றமும் கொண்டு காண்போர் நெஞ்சை கலங்க வைத்தவர் மாஸ்டர் காஜா ஷெரீப். அதனைத் தொடர்ந்து வந்த புதிய வார்ப்புகள் படத்திலும் குழந்தையாகவே தனது நடிப்பால் ரசிகர்களை அசர வைத்தார்.
அதன்பின் கே.பாக்யராஜ் நடித்து வெளியான படம் அந்த ஏழு நாட்கள், அதில் பாலகாட்டு மாதவன் கதாபாத்திரத்தில் பாடகராக நடித்திருந்தார் பாக்கியராஜ் . அதில் அவருக்கு சிஷ்யனாக ‘டோலாக்’. பையனாக தோன்றி கோபியாகவே வாழ்ந்திருந்தார் காஜா ஷெரீப். ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தில் நடிகரும் இயக்குனருமான விசுவின் இரண்டாவது மகனாகவும் ரகுவரனின் தம்பியாகவும் நடித்திருப்பார். மேலும் பாக்யராஜூடன் மீண்டும் சுவர் இல்லாத சித்திரங்கள் படத்திலும் நடித்திருந்தார்.
காஜா ஷெரீப் நடிப்பைப் கண்டு மிரண்டு போன இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் இவரை அடுத்த கமல்ஹாசன் என்று வாழ்த்தினார். மேலும் ரஜினியுடன் போக்கிரி ராஜா, தனிக்காட்டு ராஜா, ரங்கா போன்ற படங்களிலும் நடித்துப் புகழ் பெற்றார். குழந்தை நட்சத்திரமாகவே பல படங்களில் நடித்தவருக்கு ஏனோ டூயட் பாடும் வாய்ப்பு மட்டும் கிடைக்கவில்லை.
1980-90 காலகட்டங்களில் அசைக்க முடியாத குழந்தை நட்சத்திரமாக பலருக்கும் அறிமுகமான காஜா ஷெரீப் அதன் பிறகு நடிப்பதைக் குறைத்துக் கொண்டார். கடைசியாக தலைமகன் படத்தில் நடித்திருந்தார். பல திறமைகள் இருந்தும் நடிப்பில் தொடர்ந்து ஜொலிக்காமல் போன காஜா ஷெரீப் தற்போது மலேசியா, சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாட்டாளராகப் பணிபுரிந்து வருகிறார்.