கூலி படத்துக்காக மரணம் வரை சென்று மீண்டு வந்த நடிகர் அமிதாப் பச்சன்!
1983ம் ஆண்டு கூலி படத்தில் நடிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் அமிதாப் பச்சன் மரணத்தை நெருங்கிவிட்டு திரும்பியுள்ளார்.;
கூலி படத்தில் நடிக்கும் போது தான் சண்டைக் காட்சியில் அமிதாப்புக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. ஜூலை 26, 1982 மன்மோகன் தேசாய் டைரக்ஷனில் பல்கலைக்கழக வளாகத்தில் சூட்டிங் நடந்தது.
வில்லன் தாக்கும் போது டேபிளின் மீது மோதி கீழே விழ வேண்டும். அமிதாப்புக்கு மூமண்ட் தவறி விட டேபிளின் எட்ஜ் பட்டு விட்டது. சாதாரண அடி என்று பார்த்தால், கொஞ்ச நேரத்தில் அமிதாப் துடிதுடிக்க ஆரம்பித்தார். அப்போது தான் வயிற்றுக்குள் கிழிசல் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரியவந்து அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு நிலைமை போய் விட்டது.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனாலும் உடல் நிலை முன்னேற்றம் இல்லை. பிறகு மும்பை பிரீஜ் கேன்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போதும் முன்னேற்றம் இல்லை.
கோமா நிலைக்கு சென்று விட்டார். மருத்துவ மொழிகளின் கீழ் கிளினிக்கலி டெட்.. என்ற வார்த்தைகளை பயன்படுத்த தொடங்கி விட்டனர். இந்த தகவல்கள் வெழியாக நாடே பரபரப்பானது. காரணம், ஸ்டார் என்றால் சாதாரண சூப்பர் ஸ்டார் அல்ல, ராஜேஷ் கண்ணாவுக்கு பிறகு ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆட்டி படைத்தவர் அமிதாப்பச்சன். அமிதாப் படம் படம் ரிலீஸ் ஆனால் மைல் கணக்கில் கியூவில் நின்று டிக்கெட் வாங்கும் ரசிகர்கள், பிரார்த்தனைகளுக்கு போய் விட்டார்கள்.
அமிதாப்பச்சனுக்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி குடும்பத்துடன் நெருங்கிய நட்பு உண்டு. அதிலும் ராஜீவ் காந்தியும் அமிதாப்பச்சனும் மிக மிக நெருக்கமான நண்பர்கள். அமெரிக்கா போகவிருந்த ராஜீவ்காந்தி அந்த பயணத்தை ரத்து செய்து விட்டு மும்பைக்கு வந்து அமிதாப்புக்கு தேவையான சிகிச்சைகள் மீது நேரடியாக ஆர்வம் காட்டினார்.
சில வார போராட்டங்களுக்குப் பிறகு அமிதாப் உடல் நலத்தில் திடீர் முன்னேற்றம் ஏற்பட்டது. அவரது ரசிகர்கள், பொதுமக்களின் வேண்டுகோள் பலித்தது. இருப்பினும் தொடர்ந்து பல மாதங்கள் சிகிச்சை பெற்ற பிறகு தான் அமிதாப் பூரண குணமடைய முடிந்தது.
தொடர்ந்து கூலி படத்தை நடித்து முடித்தார் அமிதாப். 1983 ஆம் ஆண்டு வெளியான அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. படத்தில், குறிப்பிட்ட அந்த சண்டைக்காட்சி வரும் போது குறிப்பிட்ட இந்த ஷாட்டின் போது தான் அமிதாப்புக்கு அடிபட்டது என்று காட்டுவார்கள்.