நிலவை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட ரஷ்யாவின் லூனா-25 மிஷன் தோல்வி

நிலவை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட  ரஷ்யாவின்  லூனா-25 மிஷன் தோல்வி
X

நிலவின் தென்துருவத்தில் ஆராய்ச்சி பணிக்காக அனுப்பப்பட்ட ரஷ்யாவின் லூனா-25 விண்கலம்.

நிலவை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட ரஷ்யாவின் லூனா-25 மிஷன் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலவை ஆராயும் ரஷ்யாவின் லூனா-25 மிஷன் தோல்வி அடைந்தது. லூனா விண்கலத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக ரஷ்ய விண்வெளி நிறுவனமான ராஸ்கோஸ்மோஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் கட்டுப்பாடற்ற சுற்றுப்பாதையில் சுழன்று நிலாவில் விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லூனா-25 நிலாவின் தென் துருவத்தில் மென்மையாகத் தரையிறங்க இருந்தது. ஆனால், அது நடப்பதற்கு முன்பாக சுற்றுப்பாதையில் நகர்ந்துகொண்டிருந்த விண்கலம் தொழில்நுட்ப கோளாறுகளை எதிர்கொண்டதாக நேற்று ரோஸ்காஸ்மோஸ் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது விண்கலம் நிலாவின் மோதியதாக ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ்.


கடந்த 50 ஆண்டுகளில் ரஷ்யா மேற்கொண்ட முதல் நிலவுப் பயணம் இது. உறைந்த நீர் மற்றும் விலைமதிப்பற்ற பல கூறுகள் நிலாவில் உள்ளதாகக் கருதும் விஞ்ஞானிகள், அதன் ஒரு பகுதியை ஆராய இந்தத் திட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்தியா அனுப்பியுள்ள சந்திராயன்-3 விண்கலத்திற்கு முன்னதாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரஷ்யாவின் லூனா-25 விண்கலத்தில் கடைசி நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

"லூனா-25 விண்கலத்தை நிலவில் தரையிறக்குவதற்கு முந்தைய சுற்றுவட்டப்பாதையில் செலுத்த தயாரான போது அசாதாரண சூழல் ஏற்பட்டது" என்று ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ் தெரிவித்துள்ளது.

"அந்த செயல்பாட்டின் போது, தானியங்கி நிலையத்தில் அசாதாரண சூழல் எழுந்தது. இதனால், திட்டமிட்டப்படி குறிப்பிட்ட அளவில் அந்த செயல்முறையை மேற்கொள்ள முடியவில்லை" என்று ரோஸ்காஸ்மோஸ் தனது அறிவிக்கையில் கூறியுள்ளது.

விஞ்ஞானிகள் நிலைமையை ஆராய்ந்து வருவதாக கூறியுள்ள ரோஸ்காஸ்மோஸ், கூடுதல் விவரங்களை அளிக்கவில்லை.

முன்னதாக, லூனா-25 விண்கலத்தில் இருந்து முதல் கட்ட தகவல்கள் கிடைத்திருப்பதாகவும், அவற்றை ஆய்வு செய்து வருவதாகவும் ரோஸ்காஸ்மோஸ் கூறியிருந்தது.

மேலும், அந்த விண்கலம் எடுத்த, நிலவின் 'ஸீமன்' பள்ளத்தின் புகைப்படத்தையும் அந்த அமைப்பு சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தது.

'அது நிலவின் தென் கோளத்தில் உள்ள மூன்றாவது ஆழமான பள்ளம், அதன் விட்டம் 190 கி.மீ., ஆழம் 5 கி.மீ.' என்றும் ரோஸ்கோஸ்மோஸ் தெரிவித்திருந்தது

இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் நிலவுக்குச் செல்லும் மூன்றாவது பயணம்தான் சந்திரயான்-3 திட்டம்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜூலை 14ஆம் தேதி புறப்பட்ட சந்திரயான் 3 விண்கலம், 40 நாட்கள் நீண்ட பயணத்திற்குப் பிறகு ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும்.

நிலவின் மேற்பரப்பிலுள்ள அதிர்வுகள் குறித்த ஆய்வுக்காக சந்திரயான் 1 மற்றும் சந்திரயான் 2-இன் விக்ரம் தரையிறங்கி கலன், பிரக்யா ஊர்தி கலன் ஆகியவையும் அதே தென் துருவத்தில் தரையிறங்க அனுப்பப்பட்டன.

தற்போது சந்திரயான் 3, அதே பகுதியில்தான் தரையிறங்கப் போகிறது. இருப்பினும், சந்திரயான் 1, நிலவின் தென் துருவத்தில் மோதி தரையிறங்கியது. சந்திரயான் 2 மெதுவாக தரையிறங்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.

ஆனால், இப்போது சந்திரயான் 3 மூலம் நிலவின் தென் துருவத்தில் மெதுவாகத் தரையிறங்கும் முதல் நாடு என்ற புகழை அடைய இந்தியா முயல்கிறது.


இந்தியாவை போலவே, ஆகஸ்ட் 11ஆம் தேதி ரஷ்யாவால் ஏவப்பட்ட லூனா 25 விண்கலமும், நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குவதற்காகப் பயணித்துக் கொண்டிருந்தது.

லூனா 25இல் கேமராக்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ரஷ்ய விண்வெளி நிறுவனம் ஏற்கெனவே வெளியிட்டுள்ளது.

திட்டமிட்டபடி நடந்தால் ஆகஸ்ட் 21ஆம் தேதியன்று நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், லூனா 25 தற்போது தோல்வியடைந்துள்ளது.

ஆனால், இந்த முயற்சியில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பது முந்தித் தரையிறங்குவது மட்டுமே போதுமானது அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது

Tags

Next Story