'முதுமையில் உற்ற துணையாக இருப்பது, இளமையில் கற்ற கல்வியே'

முதுமையில் உற்ற துணையாக இருப்பது, இளமையில் கற்ற கல்வியே

விழாவில் பேசிய செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி.

செய்யாறு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பொன்விழா நிகழ்ச்சியில், ‘இளமையில் கற்கும் கல்வியே, நமக்கு முதுமையிலும் உற்ற துணையாக வரும்,’ என, மகளிர் பள்ளி பொன் விழாவில் எம் எல் ஏ பேசினார்.

செய்யாறு அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில், பொன்விழா ஆண்டை முன்னிட்டு மலர் வெளியீட்டு விழா, புரவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, ஆண்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

விழாவில், தலைமை ஆசிரியர் உமா மகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் எல்லப்பன், மாவட்ட ஊராட்சி மன்றத்தலைவர் பார்வதி சீனிவாசன், ஒன்றிய குழு உறுப்பினர்கள், நகரமன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி தலைமை வகித்து, பொன்விழா மலரை வெளியிட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கினார்.

விழாவில், அவர் பேசியதாவது,

செய்யாறு கல்வி மாவட்டத்தில் பொன் விழா காணும் இப்பள்ளி, சிறந்து விளங்க காரணம் 'இதனை, இதனால் இவன் முடிக்கும்' என்ற குறளுக்கு ஏற்ப, இப்பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்கள் உழைப்பால் இப்பள்ளி அனைவராலும் கவரப்படுகிறது. இப்பள்ளியில் படிப்பவர்கள் உயர்கல்வி மட்டும் இன்றி மிக உயர்ந்த பதவிகளில் வகித்து வருகின்றனர். தனியார் பள்ளியைக் காட்டிலும் மேம்பட்டதாக இந்த அரசு பள்ளி உயர்ந்து நிற்கிறது.

பெரியார் வழியில் வந்த கருணாநிதி, அவரது வழியில் வந்த முதல்வர் என புதுமைப்பெண் திட்டம் உருவாக்கி பெண் கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்டு கொண்டிருக்கின்றனர். உங்கள் பகுதி முதல்வர் திட்டம் கோரிக்கைகளில், இந்த பள்ளிக்கு தேவையான கட்டமைப்பு வசதிக்காக ரூபாய் 7 கோடி ஒதுக்கி தர கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆசிரியர்கள் ஒழுக்கத்தை கற்றுத் தருகிறார்கள் . மாணவர்கள் அதனை கடைபிடிக்க வேண்டியது அவசியமாகும் . இளமையில் கற்கும் கல்வியே நமக்கு முதுமையிலும் உற்ற துணையாக வரும். ஆகவே, மாணவர்கள் ஒழுக்கத்துடன் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என, பேசினார்.

விழாவில் பெற்றோா் ஆசிரியா் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு நிா்வாகிகள், ஓய்வு பெற்ற மாவட்டக் கல்வி அலுவலா்கள், தலைமை ஆசிரியா்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Next Story